ஏற்கனவே நடிகர்கள் சிலர் அரசியலுக்கு வந்து மக்களுக்கு நல்லது செய்வதாக கூறி விட்டு பின் வாங்கி விட்டது போலவே விஜய்யும் அப்படி செய்து விடுவாரா என்ற சந்தேகம் அவர் மீது எனக்கு இருந்தது என்று நடிகர், இயக்குனர் பார்த்திபன் சமீபத்தில் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
விஜய் நடிகராக இருந்து அரசியலுக்கு வந்து உள்ளதை அடுத்து, அவருடைய செயல்பாடு எப்படி இருக்கிறது என்று செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பதில் அளித்த பார்த்திபன், "நான் கொஞ்சம் பாசிட்டிவாக எல்லாவற்றையும் பார்ப்பேன். நண்பர் விஜய்க்கு அரசியல் என்பது அவசியமே இல்லை. ஏனெனில் அவர் ஒரு பெரிய ராஜாங்கம் நடத்தி வருகிறார். அடுத்த சூப்பர் ஸ்டார், கலெக்ஷன் மன்னர், 200 கோடி சம்பளம் என்றெல்லாம் அவருக்கு கிடைக்கிறது.
இந்த மாதிரி ஒரு சிம்மாசனத்தை விட்டுவிட்டு எதற்காக மக்கள் பிரச்சனைக்கு அவர் குரல் கொடுக்க வேண்டும் என்ற கேள்வி எழுகிறது. அப்படி என்றால் அவர் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று விருப்பப்படுகிறார். அவரை இப்பவே தடுத்து நிறுத்துவதற்கு பதிலாக அவருக்கு ஆதரவு அளிக்க வேண்டும்.
மாறுதல் ஒன்றுதான் மாறாதது. கடைசி வரைக்கும் இவங்க தான் ஆட்சி செய்யணும் என்பது எதுவும் இல்லை. யார் வேண்டுமானாலும் ஆட்சிக்கு வரலாம் என்ற ஜனநாயகத்தை விஜய் செய்வது நல்ல விஷயம். ஏற்கனவே சில நடிகர்கள் அரசியலுக்கு வருவதாக சொல்லிவிட்டு பின்வாங்கியதால், விஜய் மீதும் ஒரு சந்தேகம் இருக்கிறது. இப்படித்தான் பேசுவார்கள், அதன் பின்னர் பின்வாங்கி விடுவார்கள் என்ற சந்தேகம் இருக்கு. அந்த சந்தேகத்தை மட்டும் விஜய் தீர்த்து விட்டால், அவர் நிச்சயம் அரசியலிலும் வெற்றி பெறுவார்" என்று தெரிவித்தார்.