சென்னை 28, சரோஜா, மங்காத்தா மற்றும் மாநாடு உள்ளிட்ட வெற்றிப் படங்களை இயக்கிய வெங்கட்பிரபு இயக்கத்தில் சமீபத்தில் விஜய்யின் GOAT திரைப்படம் ரிலீஸானது. கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் அந்த படம் பெரியளவில் வசூல் செய்தது.
இதையடுத்து வெங்கட் பிரபு தற்போது தன்னுடைய அடுத்த படத்துக்கான வேலைகளில் பிஸியாக உள்ளார். வெங்கட் பிரபுவை ஒரு கமர்ஷியல் இயக்குனராக நிலைநிறுத்தியது என்றால் அது அவர் இயக்கிய மங்காத்தா திரைப்படம்தான்.
இந்நிலையில் அந்த படத்தின் கதை தன்னுடையது என இயக்குனரும் வெங்கட்பிரபுவின் தந்தையுமான கங்கை அமரன் கூறியுள்ளார். அதில் “அந்த கதையில் முதலில் அஜித் நடிப்பதாக இல்லை. அப்போது நான்தான் அந்த கதையை சொல்லி உன் பேரிலேயே பண்ணிக்கொள் என்று வெங்கட்டிடம் சொன்னேன். பின்னர் அந்த கதையைப் பற்றிக் கேள்விப்பட்டு அஜித் உள்ளே வந்தார்” எனக் கூறியுள்ளார்.