தமிழ் சினிமாவின் மூத்த இயக்குனர்களில் ஒருவரான பாரதிராஜாவின் மகனும், நடிகருமான மனோஜ், சில தினங்களுக்கு முன்னர் மாரடைப்புக் காரணமாக காலமானார். அவரின் திடீர் மறைவு திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அவரது உடல் நீலாங்கரையில் உள்ள பாரதிராஜாவின் இல்லத்தில் அஞ்சலிக்கு வைக்கப்பட்டு பின்னர் பெசண்ட் நகர் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
சோகத்திலேயே பெரும் சோகம் புத்திரசோகம் என்று சொல்வார்கள். தன் மகன் சாவைப் பார்ப்பது எந்தவொரு தந்தைக்கும் நேரக் கூடாத சோகம். அப்படி ஒரு துயரம் பாரதிராஜாவுக்கு நடந்துள்ளது. இந்நிலையில் பாரதிராஜாவின் நண்பரும், சகோதரர் போன்றவருமான கங்கை அமரன் பாரதிராஜாவின் வீட்டுக்கு சென்று அவரை துயரத்தில் இருந்து மீட்கும் விதமாக பாட்டு பாடியுள்ளார்.
பாரதிராஜா திரைக்கதையில் உருவான கல்லுக்குள் ஈரம் படத்தில் இடம்பெற்ற சிறுபொன்மனி என்ற பாடலை தான் எழுதிய சூழலை சொல்லி, அந்த பாடலைப் பாடிக்காட்டி கங்கை அமரன் பாரதிராஜாவுடன் அன்பொழுக பேசும் வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.