சூர்யா நடித்த கங்குவா திரைப்படத்தில் நடித்த திஷா பதானியின் சகோதரி சுவர் ஏறி, குதித்து குழந்தையை காப்பாற்றிய வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
பிரபல பாலிவுட் நடிகை திஷா பதானி சகோதரி குஷ்பு பதானி ராணுவத்தில் பணியாற்றியவர். இவர் நேற்று முன்தினம் காலை வாக்கிங் சென்றபோது, திடீரென ஒரு கட்டிடத்தில் இருந்து குழந்தை அழும் சத்தம் கேட்டது. அந்த கட்டிடம் பூட்டி இருந்ததால் உள்ளே செல்ல முடியவில்லை.
இதனை அடுத்து, அவர் சுவர் ஏறி உள்ளே குதித்து பார்த்தபோது, பத்து மாதங்கள் மட்டுமே கொண்ட பெண் குழந்தை ஒன்று காயங்களுடன் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே அவர் முதலுதவி சிகிச்சைகளை வழங்கி, பின்னர் போலீசுக்கு தகவல் அளித்தார்.
போலீசார் விரைந்து வந்து அந்த குழந்தையை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அந்த குழந்தையை ஒரு பாழடைந்த வீட்டில் விட்டுச் சென்றது யார் என்பது குறித்து, சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
குஷ்பு பதானி இது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவை பதிவிட்டுள்ளார். தற்போது அவரது செயலுக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. ராணுவத்திலிருந்து ஓய்வு பெற்றிருந்தாலும், இன்னும் அவர் சமூக சேவைகளுக்கான கடமையில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார் என்று நெட்டிசன்கள் பலர் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.