மோகன்லால் நடித்த எம்புரான் திரைப்படத்தை தடை செய்ய வேண்டும் என கேரள மாநில பாஜக நிர்வாகி ஒருவர் கேரள உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளதாக வெளியான செய்தி வெளியாகியுள்ளது.
மோகன்லால் நடிப்பில் பிரித்திவிராஜ் இயக்கத்தில் உருவான எம்புரான் திரைப்படம் மார்ச் 27ஆம் தேதி வெளியான நிலையில், இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்றுள்ளது. மேலும், ஐந்தே நாட்களில் இந்த படம் 200 கோடி ரூபாய் வசூல் செய்துள்ள நிலையில், இந்த படத்திற்கு வலதுசாரிகள் கடுமையான கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், எம்புரான் படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என பாஜக நிர்வாகி விஜேஷ் என்பவர் கேரளா உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். அதில் 2002 ஆம் ஆண்டு கோத்ரா கலவரத்தை குறிப்பிடும் காட்சிகள் இந்த படத்தில் இருப்பதாகவும், பாதுகாப்பு அமைச்சகத்தை பற்றிய தேவையில்லாத கருத்துக்கள் உள்ளதாகவும், மத்திய புலனாய்வு அமைப்புகளின் நம்பகத்தன்மை மற்றும் நேர்மை குறித்து சர்ச்சைக்குரிய காட்சிகள் இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
வகுப்புவாத கலவரத்தை தூண்டும் வகையில் உள்ள இந்த படத்தை தடை செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கு இன்னும் பட்டியலிடவில்லை என்பதால் இந்த வழக்கு விசாரணைக்கு வருமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.