மலையாள சூப்பர் ஸ்டார் நடிகரான மம்மூட்டியின் மகனான துல்கர் சல்மான் நடிகராக அறிமுகமாகி அடுத்தடுத்து ஹிட்களைக் கொடுத்து முன்னணி நடிகராக வளர்ந்துள்ளார். மலையாளம் தாண்டியும் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிப் படங்களில் அவர் அடுத்தடுத்து நடித்து வருகிறார்.
சீதாராமம் படத்தின் வெற்றியின் மூலம் இந்தியா முழுவதும் அறியப்பட்ட நடிகரானார் துல்கர் சல்மான். அதனால் அவர் நடிக்கும் படங்கள் இப்போது தென்னிந்தியா முழுவதும் ரிலீஸாகின்றன. கடந்த தீபாவளிக்கு அவர் நடிப்பில் உருவான லக்கி பாஸ்கர் திரைப்படம் பேன் இந்தியா ஹிட்டானது. அதையடுத்து அவர் நடிப்பில் உருவாகியுள்ள காந்தா திரைப்படம் தற்போது நேர்மறையான விமர்சனங்களைப் பெறத் தொடங்கியுள்ளது.
இப்படி தொடர்ந்து நல்ல படங்களாகக் கொடுத்து வருவது பற்றி ஒரு நேர்காணலில் அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதில் “நான் நல்ல பின்னணியில் இருந்து பணக்காரக் குடும்பத்தில் வருகிறேன். அதனால் எனக்குக் கார் வாங்க வேண்டும், வீடு வாங்க வேண்டும் என்ற கட்டாயங்கள் இல்லை. அதனால் நான் நல்ல படம் பண்ணியே ஆகவேண்டும். என் அப்பா என்னிடம் சொல்வார் “நான் வீடு கட்ட வேண்டும் என்று ஆசைபட்டபோதுதான் சில கெட்ட படங்களை பண்ணினேன். அந்தக் காரணமெல்லாம் உனக்கில்லை" என்று. அதனால் நான் கெட்டப் படங்கள் செய்துவிட்டு எந்த காரணமும் சொல்ல முடியாது” எனக் கூறியுள்ளார்.