Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சினிமா பிரபலங்களின் துக்க நிகழ்வுகளை ஊடகங்களில் ஒளிபரப்ப வேண்டாம்: தயாரிப்பாளர் சங்கம்

Advertiesment

Mahendran

, வெள்ளி, 28 மார்ச் 2025 (10:29 IST)
ஊடகங்களில் சினிமா பிரபலங்களின் துக்க நிகழ்வுகளை ஒளிபரப்ப வேண்டாம் என தயாரிப்பாளர்கள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இதுகுறித்து, தயாரிப்பாளர்கள் சங்கம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
 
ஊடக நண்பர்களுக்கு ஓர் வேண்டுகோள். அன்பிற்குரிய ஊடக நண்பர்களுக்கு, மரணம் என்பது எல்லோருக்கும் நிகழக்கூடிய ஒன்று. அது இயற்கையின் தீர்மானத்திற்கு உட்பட்டது என்பதை இவ்வுலகில் பிறந்த எல்லா உயிர்களும் அறியும்.ஆறறிவு கொண்ட மனிதன் இன்னும் சற்றே அதிகமாகவே அதை உணர்ந்தவன். மரண வீடுகள் மௌனிக்கப்படவும்... துயரத்தைப் பகிர்ந்துகொள்ளவும், துயர்கொள்ளவும் வேண்டியவை.
 
யாரோ இறந்துபோனா.. எனக்கும் அவருக்கும் என்ன? ஒருவரின் அழுகையோ, துயரத்தை வெளிப்படுத்தும் விதத்தையோ ஏன் இவ்வளவு வெட்ட வெளிச்சமாக்க வேண்டும்? ஒருவரின் துயர் நமக்கு காசாகத்தான் வேண்டுமா?பார்வையாளர்களைக் கொண்டு வரும் என்ற எண்ணம் எத்தனை இரக்கமற்றது? கொடியது?.
 
நாம் மற்றொருவரின் மரணத்தையோ, இயலாமையையோ கொண்டாடும் மனநிலைக்கு வந்துவிட்டோமோ என்ற கவலை வலுக்கிறது.ஊடகங்கள் கார்களின் உள்ளேயும்... நடுவீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருக்கும் உடலையும் ஏன் படம் பிடிக்க வேண்டும்? அதுவும் முண்டியடித்துக்கொண்டு துக்க முகங்களைக் காட்டுவதில் அப்படி என்ன பேரானந்தம் கிடைத்துவிடப் போகிறது? இனி வரும் காலங்களில் ஊடக அனுமதி இறப்பு வீடுகளில் கூடவே கூடாது என்பதை முன்னெடுக்க வேண்டும்..
 
அனைத்து பத்திரிகையாளர் சங்கங்களும், பத்திரிகை தொடர்பாளர் யூனியனும் இணைந்து இதற்கு ஒரு நல்ல தீர்வைக் காண்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. சக மனிதர்களின் இழப்பை நம் வீட்டு இழப்பாகக் கருதி துயர் விசாரிக்க வரட்டும். கையில் கேமரா இல்லாமல், இனிவரும் காலங்களில் இச்செயல் முற்றிலும் தவிர்க்க நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து ஊடகங்களுக்கு முன், தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் இவ்வேண்டுகோளை வைக்கிறது. நன்றி!” 
 
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விஜய் பிறந்தநாளுக்கு ‘ஜனநாயகன்’ படத்தில் இருந்து வரும் சர்ப்ரைஸ் அப்டேட்!