கமல்ஹாசனின் பரபரப்பு ட்வீட்கள் இல்லாததால், தமிழக அரசியல் களம் பொலிவிழந்து காணப்படுகிறது.
ஜெயலலிதா மறைவுக்குப் பின் காமெடிக் களமாக இருந்த தமிழக அரசியல் களத்தை பரபரப்பாக்கியது கமலின் ட்வீட்கள்தான். வாய்ச்சொல் வீரராக மட்டுமின்றி, வடசென்னையில் களமிறங்கி தன்னுடைய செயல்பாட்டை எல்லோருக்கும் உணர்த்தினார் கமல்ஹாசன்.
ஆனால், கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக கமல்ஹாசனைக் காணவில்லை. மீதமிருந்த ‘விஸ்வரூபம் 2’ காட்சிகளை சென்னையிலுள்ள ராணுவக் கல்லூரியில் படமாக்கிய கமல்ஹாசன், சவுண்ட் மிக்ஸிங்கிற்காக அமெரிக்கா சென்றுவிட்டார்.
தமிழக அரசியல் வரலாற்றையே புரட்டிப்போட்ட ஆர்.கே.நகர் தேர்தல் முடிவு குறித்து அவர் ஒரு ட்வீட் கூட போடாதது, அரசியல் நோக்கர்களை ஆச்சரியத்திற்கு உள்ளாக்கியிருக்கிறது. சினிமா வேலை வந்துவிட்டால் அரசியலை மறந்துவிடுவாரா? என்பது போன்ற கேள்விகளும் முளைக்கத் தொடங்கியிருக்கின்றன.