இயக்குனர் ராம் பேரன்பு திரைப்படத்துக்குப் பிறகு நிவின் பாலி, அஞ்சலி மற்றும் சூரி ஆகியோரின் நடிப்பில் “ஏழுமலை ஏழு கடல்” என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் பணிகள் நிறைவடைந்துள்ள் நிலையில் முதல் முதலாக ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட உள்ளது.
இதை அறிவித்துள்ள படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி “படைப்புகள் திரைக்கு வரும் முன்பே அங்கீகாரம் பெறுதல் பெரும் உற்சாகத்தை கொடுக்கும். அப்படியொரு மானசீக மகிழ்ச்சியைத் தந்திருக்கிறது இயக்குநர் ராம் இயக்கியிருக்கும் “ஏழு கடல் ஏழு மலை”, எனது வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் இயக்குனர் ராமின் அடுத்த படைப்பான 'ஏழு கடல் ஏழு மலை' திரைப்படம் 53 வது ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவின் 'பிக் ஸ்கிரீன் போட்டிப் பிரிவில்' தேர்வாகியிருப்பது மிகுந்த உத்வேகத்தை கொடுக்கிறது.
வருகிற 2024 ஜனவரி 25 முதல் பிப்ரவரி 4 வரை நடைபெறவுள்ள ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவின் முக்கிய போட்டி பிரிவான பிக் ஸ்கிரீன் விருதிற்கு பல உலகத் திரைப்படங்களோடு ஏழு கடல் ஏழு மலை போட்டியிடுவதில் பெருமை கொள்கிறோம்.
இதை சாத்தியமாக்கிய நிவின் பாலி, அஞ்சலி, சூரி மற்றும் இசையில் எப்போதுமே நுணுக்கமாக விளையாடும் யுவன் ஷங்கர் ராஜா, ஒளிப்பதிவினை சிறப்பாகக் கையாண்டிருக்கும் ஏகாம்பரத்திற்கும், படத்திற்கு மிக பக்கபலமாக நின்ற ஆர்ட் டைரக்டர் உமேஷ் குமாருக்கும், ஸ்டன்ட் மாஸ்டர் ஸ்டன்ட் சில்வா மற்றும் ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவின் தேர்வுக் குழுவிற்கும் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
நல்ல படைப்புகளுக்கு எப்போதும் ஆதரவு அளித்து வரும் ஊடகத்துறை நண்பர்களும் சினிமா ரசிகர்களும் 'ஏழு கடல் ஏழு மலை' திரைப்படத்திற்கும் உங்களின் ஆதரவையும் ஊக்கத்தையும் அளிப்பீர்கள் என்று நம்புகிறோம். ஆண்டின் இறுதியில் இச்செய்தியை பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறோம்.
சர்வதேச அளவில் முதல் முறையாக சிறப்புக்குரிய ஒரு விருதிற்கான தேர்வில் எமது நிறுவனத்தின் படைப்பை உலக அரங்கில் கொண்டு நிறுத்தியுள்ள எங்கள் இயக்குநர் ராமிற்கு முதல் நன்றி. நல்லவைகளை எதிர்பார்த்திருக்கும் அனைவருக்கும் ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்” என தெரிவித்துள்ளார்.