காவிரி நீர் பிரச்சனை தற்போது தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலத்துக்கு இடையே உச்சத்தில் இருக்கிறது என்பதும் குறிப்பாக இன்று கர்நாடக மாநில முழுவதும் தமிழகத்திற்கு தண்ணீர் தர எதிர்ப்பு தெரிவித்து பந்த் நடத்தப்பட்டு வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டு போதுமான மழை இல்லாததால் தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிட முடியாது எனக் கூறிவருகின்றனர்.
கர்நாடகா அரசின் இந்த செயல் தமிழகத்தில் அதிருப்தி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் தமிழ் சினிமா இயக்குனரும் தயாரிப்பாளருமான சுரேஷ் காமாட்சி தன்னுடைய முகநூல் பதிவில் “நீரை சேகரிக்க இனியாவது நாம் பழக வேண்டும். நீர்ப் பிச்சை எடுக்கிறோமா? இல்லை, அரசியல் பிச்சைக்காக பயனாகிறதா காவிரி எனத் தெரியவில்லை. காவிரிப் படுகை விவசாயிகளின் தேவைக்கு நீரை சேகரிக்கும் நடவடிக்கைகளில் இத்தனை ஆண்டு காலம் எந்த அரசும் நடவடிக்கை எடுக்கவே இல்லை. மாற்றுத் திட்டம் வேண்டாமா நமக்கு? மானத் தமிழன் வீரத் தமிழன் என்பது வெறும் பேச்சில் தானா?? தண்ணீர் தருகிறேன் எனச் சொன்னாலும்... வேணாம். தேவையில்லை. எங்கள் தேவையை நாங்களே பார்த்துக் கொள்கிறோம் எனும் நிலையை எப்போது உருவாக்கப் போகிறோம்??
நேற்று நடந்த சித்தா பட விழாவில் கன்னடத்தில் பேச முயற்சித்தும் சித்தார்த்தால் பத்திரிகையாளர்கள் சந்திப்பை தொடர இயலவில்லை. அவ்வளவு தெளிவாக அரசியல் நடத்தும் வித்தை அண்டை மாநிலத்தவருக்குத் தெரிந்திருக்கிறது. நமக்கு ஏன் தெரியவில்லை? காலங்காலமாக கடந்து வரும் கேள்விக்கு பதில் தேட வேண்டிய நேரம் இது.” எனக் கூறியுள்ளார்.