சமீபத்தில் வெளிவந்த பா.ரஞ்சித் தயாரித்த 'பரியேறும் பெருமாள்' திரைப்படத்தை விமர்சகர்கள் ஆஹா ஓஹோ என கொண்டாடி வருகின்றனர். இதுபோன்ற ஒரு திரைப்படம் இதுவரை வந்ததே இல்லை என பலர் விமர்சனம் செய்திருப்பதும் தெரிந்ததே. ஆனால் வசூல் அளவில் இந்த படம் தோல்வியை சந்தித்துள்ளதாக விநியோகிஸ்தர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அதேபோல் நடுநிலை விமர்சகர்கள் இந்த படம் ரொம்ப சுமாரான படம் என்றும் விமர்சகர்கள் ஏன் இந்த படத்தை தூக்கி வைத்து கொண்டாடுகின்றனர் என்று தெரியவில்லை என்றும் கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக ஒரு புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதில் இரண்டு வெவ்வேறு நிற நாய்கள் இருப்பதும் போன்றும், அதில் நீல நிற நாய்கள் அப்பாவிகள் போன்றும் இன்னொரு வகை நாய்கள் ஆதிக்கம் செலுத்துவது போன்றும் உள்ளது. இந்த புகைப்படம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் இதுகுறித்து 'பழைய வண்ணாரப்பேட்டை' பட இயக்குனர் மோகன் தனது கருத்தை டுவிட்டரில் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது: சத்தியமாக இதுவரை சாதி பார்த்து யாரையும் ஒதுக்கியோ மரியாதை குறைவாகவே பேசியது பழகியது இல்லை. என்னமோ நீலத்துல இருக்க ஒட்டு மொத்த மக்களும் அப்பாவிகள் போல இருக்கு. வெறுப்பை விதைக்காமல் ஒற்றுமையை விதைக்க முயற்சி செய்யுங்கள். எனக்கும் திரைக்கதை எழுத தெரியும். கண்ணுக்கு கண் பதில் அல்ல' என்று கூறியுள்ளார்.
இவர் தான் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர், 'ஊழலை ஒழிப்பேன் அப்படின்னு சினிமாவை சார்ந்த யார் சொன்னாலும் நம்பாதீங்க.. நான் உட்பட.. லஞ்சம் கொடுத்து ஊழல் செய்யாம படத்திற்கு வரிச்சலுகை வாங்க முடியாது இங்க.. அரசாங்கமும் அதிக வரி சினிமாவிற்கு விதிப்பதால் இந்த ஊழலை தெரிந்தே செய்ய வேண்டிய நிலை எங்களுக்கு' என்று கூறியவர் என்பது குறிப்பிடத்தக்கது.