"ஒரு படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனம் எழுதக் காசு கொடுப்பார்கள். ஆனால், இப்போது நெகட்டிவ் விமர்சனங்கள் எழுதவும் பணம் கொடுக்கிறார்கள் என்பதை இந்த 'ரெட்ரோ' படத்தின் மூலம் நான் முதன்முதலாக அனுபவித்தேன்!" என இயக்குனர் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் கூறியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சூர்யா நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய 'ரெட்ரோ' திரைப்படம் சமீபத்தில் வெளியானது. ஊடகங்களில் நல்ல விமர்சனங்கள் கிடைத்தாலும், இந்தப் படம் வசூலில் எதிர்பார்த்த அளவுக்கு ஜொலிக்கவில்லை. இதுகுறித்து பேசிய கார்த்திக் சுப்புராஜ், "ரெட்ரோ படத்திற்கு எதிராகப் பணத்தை கொடுத்து, திட்டமிட்டு வெறுப்பு பிரச்சாரம் செய்யப்பட்டதை நான் நேரடியாகப் பார்த்தேன். இது எனக்கு மிகப்பெரிய அதிர்ச்சியாக இருந்தது," என்றார்.
"தியேட்டர்களுக்குச் சென்று நான் கவனித்தபோது, மக்கள் ரெட்ரோ படத்தைக் கொண்டாடினார்கள். ஆனால், வெறும் விமர்சனங்களுக்கு மட்டுமல்லாமல், எதிர்மறையான எண்ணங்களை பரப்புவதற்கும் பணம் செலவழிக்கப்பட்டு, திட்டமிட்ட பிரச்சாரங்கள் நடப்பது மிகவும் வேதனை அளிக்கிறது," என்று அவர் தன் ஆதங்கத்தை பகிர்ந்துகொண்டார்.
"மக்கள் ரசித்த இந்தப் படம், இந்த வெறுப்புப் பிரச்சாரங்களால்தான் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை" என்றும் கார்த்திக் சுப்புராஜ் கூறியிருப்பது திரை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.