ஜெயிலர் படத்துக்குப் பிறகு ரஜினிகாந்த் த செ ஞானவேல் இயக்கும் வேட்டையன் படத்தில் நடித்துள்ளார். படத்தில் துஷாரா விஜயன், ரித்திகா சிங், மஞ்சு வாரியர், ராணா டகுபதி, பஹத் பாசில் மற்றும் அமிதாப் பச்சன் ஆகியோர் நடிக்கின்றனர. அனிருத் இசையமைக்க, எஸ் ஆர் கதிர் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
சமீபத்தில் வெளியான படத்தின் டீசரில் ரஜினிகாந்த் ஒரு என்கவுண்ட்டர் ஸ்பெஷலிஸ்ட் போலீஸ் அதிகாரியாக வருகிறார் என்பது தெரிகிறது. அவர் பேசும் வசனங்கள் என்கவுண்ட்டரை ஆதரிப்பது போல உருவாக்கப்பட்டுள்ளன. அதேசமயம் அமிதாப் பச்சான் என்கவுண்ட்டருக்கு எதிரான மனித உரிமை அதிகாரியாகவும் காட்டப்பட்டுள்ளார். ஜெய்பீம் படத்தில் காவல்துறை கஸ்டடி துன்புறுத்தல்களைக் காட்டிய ஞானவேல் அடுத்த படத்திலேயே இப்படி என்கவுண்ட்டர் கொலைகளை நியாயப்படுத்துவது போல படம் எடுக்கலாமா எனக் கேள்விகள் எழுந்துள்ளன.
இந்நிலையில் இது சம்மந்தமாகப் பேசியுள்ள இயக்குனர் ஞானவேல் “படத்தில் ரஜினிகாந்த் என்கவுண்ட்டர் போலீஸாக நடிப்பது உண்மைதான். அவர் ஏன் என்கவுண்ட்டர் ஸ்பெஷலிஸ்ட்டாக மாறினார், அதற்கான காரணம் என்ன என்பதைப் படத்தில் காட்டியுள்ளோம்” எனப் பேசியுள்ளார். வேட்டையன் திரைப்படம் அக்டோபர் 10 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ரிலீஸுக்கு இன்னும் 15 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் படத்தின் ப்ரமோஷன் பணிகள் தொடங்கி நடந்து வருகின்றன.