Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இயக்குநர் சேரன் ஆரம்பத்தில் இருந்தது போலவே இப்போதும் எளிமையாக இருக்கிறார் - திண்டுக்கல் ஐ லியோனி!

இயக்குநர் சேரன் ஆரம்பத்தில் இருந்தது போலவே இப்போதும் எளிமையாக இருக்கிறார் - திண்டுக்கல் ஐ லியோனி!

J.Durai

, செவ்வாய், 3 செப்டம்பர் 2024 (16:13 IST)
விஜய் நடிப்பில் வெளியான நண்பன் படத்தில் ஜீவாவின் சகோதரியாகவும், கடல் படத்தில் கவுதம் கார்த்திக்கின் சிறு வயது தாயாகவும் நடித்து கவனம் பெற்றவர் தேவி. இவர் தேவிரிக்ஷா என்ற பெயரில் நடிப்பு பயிற்சி பள்ளி நடத்தி வருகிறார். இந்த பள்ளியின் 15 ஆவது ஆண்டு நாடக திருவிழா சென்னையில் நடைபெற்றது.
 
இரண்டு நாட்கள் நடைபெற்ற இந்த திருவிழாவில் சிறப்பு நாடகம், துடும்பாட்டம், கதை சொல்லி மற்றும் பல நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் நாடகத்துறை மற்றும் திரைத்துறை சார்ந்த பிரபலங்கள் கலந்து கொண்டனர். 
 
திருவிழாவின் இறுதி நிகழ்ச்சியில் இயக்குநர்கள் சேரன், சமுத்திரக்கனி, நடிகர் சௌந்தரராஜா, பட்டிமன்ற பேச்சாளர் திண்டுக்கல் ஐ லியோனி மற்றும் மறைந்த விஜே ஆனந்த கண்ணன் மனைவி ராணி கண்ணா ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
 
இந் நிகழ்வில்  இயக்குநர் சேரன் பேசியது.....
 
எல்லோருக்கும் வணக்கம். ஒரு மாலை வேளையில் நாடகம் பார்த்து நீண்ட காலம் ஆகிவிட்டது. இங்கு நாடக கலைஞர்களால் வித்தியாசமான அனுபவம் கிடைத்தது. முழுக்க முழுக்க புராணமாக இல்லாமல், இந்த கால விஷயங்களை சேர்த்து நக்கலும், நையாண்டியாகவும் செய்திருந்தது அருமையாக இருந்தது. அர்ஜூன் கதாபாத்திரம் மிகவும் பிடித்திருந்தது. அனைவரும் சிறப்பாக நடித்திருந்தார்கள்.
 
இதை நிறைய பேர் வந்து பார்த்ததில் மகிழ்ச்சி. இதை சிறப்பாக இயக்கி இருந்த விஷயம் பாராட்டுக்குரியது," என்றார்.
 
இயக்குநர் சமுத்திரக்கனி பேசியது......
 
நான் பேச நினைத்ததை அனைவரும் பேசிவிட்டனர். இங்கு அண்ணன்களோடு அமர்ந்திருந்தது பெருமை. நாடகக் கலையை விடாமல் இன்னும் இழுத்துப் பிடித்து வைத்திருக்கும் கலைஞர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள். நடித்த அனைவரும் ஒன்றிரண்டு வேஷங்களில் நடித்தது சுலபமான விஷயம் இல்லை. ஒரே ஷாட் நடித்துவிட்டு, எனக்கு அசதியாக இருக்கிறது என கூறிய பல நடிகர்கள் பார்த்திருக்கிறேன். ஆனால் இவ்வளவு நேரம் எந்த தொய்வும் இன்றி நடித்த அனைவருக்கும் உண்மையில் பாராட்டுக்கள். உங்கள் அனைவருக்கும் மிகப்பெரிய எதிர்காலம் உண்டு. இதே நாடகத்தை சில ஆண்டுகளுக்கு முன் தேவி அவர்கள் நடித்திருந்தார்கள். அதையும் நான் பார்த்திருக்கிறேன். எந்த நிகழ்வும் தற்செயலாக நடப்பதில்லை. அந்த வகையில் இன்று நீண்ட நாட்கள் கழித்து  சர்பிரைசாக அண்ணன் சேரனை சந்தித்தேன், தம்பி மற்றும் நண்பன் ஆனந்த கண்ணனின் துணைவியாரை சந்தித்தேன். மிகப்பெரிய மகிழ்ச்சி. இந்த காலை இன்னும் உயர வளரும், வளர்ந்து கொண்டே இருக்கும், வாழ்த்துகள் என்று தெரிவித்தார். 
 
திண்டுக்கல் ஐ லியோனி பேசியது.......
 
நடிப்புக்கான பயிற்சி அளிக்கும் கல்லூரிகள் அதிகம் இருக்கிறது. ஆனால், இதுபோன்ற நாடகங்களை நடத்தி, இதற்காக பயிற்சி பெறுபவர்கள் தான் மிக சிறந்த நடிகர்களாக நம் நெஞ்சங்களில் வாழ்ந்து வருகிறார்கள். நீண்ட நாள் கழித்து மேடையில் இவர்களுடன் அமர்ந்து இருக்கிறேன். பாரதி கண்ணமா தொடங்கி, திரையுலகில் ஒரு பொற்காலத்தை உருவாக்கி வெற்றிக் கொடிக் கட்டிய என் அருமை சகோதரர் சேரன். அவர் எப்பவும் இதேபோல் எளிமையாக தான் இருப்பார். சில இயக்குநர்களை பார்த்தால், கூடவே ஒரு உதவியாளரை வைத்துக் கொள்வார்கள். புகழின் உச்சத்தில் இருந்த போதும், தற்போது அதைவிட பெரிய இடத்தில் இருக்கும் போதும் ஒரே மாதிரி இருக்கக்கூடிய அற்புதமான இயக்குநர். அவருடன் இன்று இங்கு இருந்தது எனக்கு மகிழ்ச்சி." 
 
இதேபோல் எனது அருமை சகோதரர் சமுத்திரக்கனி, இன்றைய உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக இருக்கிறார். அவர் இந்த நிகழ்ச்சிக்கு எளிமையாக வந்து நம்முடன் அமர்ந்து இருப்பது பெரிய அதிசயம் தான். சுப்ரமணியபுரம் தொடங்கி ஒவ்வொரு படத்திலும் அவரது நடிப்பை ரசிக்கும் ரசிகர்களில் நானும் ஒருவன்."
 
"அவரும், தம்பி ராமையும் உருவாக்கிய சினிமா விநோதய சித்தம். அந்த படத்தை நான் பிரீவியூ பார்த்தேன். அந்த படம் என் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தியது. மேடை நாடகத்தை படமாக்கியது தான் விநோதய சித்தம். அந்த படத்தின் கதை ஒருவர் இறந்த பிறகு அவரைப் பற்றி தான் இந்த உலகம் பேசும் என்று எல்லாரும் நினைப்போம். அந்த படத்தில் உயிரிழந்த பிறகு தன்னை பற்றி என்ன பேசுகிறார்கள் என்பதை பார்க்க தம்பி ராமையா வருவார். அப்போது ஒருத்தர் கூட அவரை பற்றி சிந்திக்க மாட்டார்கள்." 
 
"மனிதன் உயிரோடு இருக்கும் வரை தான் அவனுக்கு வாழ்க்கை. இறந்த பிறகு அவன் எப்படி இருக்கிறான் என்பது அவனுக்கும் தெரியாது. அவனோடு வாழ்பவருக்கும் தெரியாது என்ற கதையை சொல்லியிருந்தார்கள். அந்த படத்தில் என் அருமை தம்பி சமுத்திரகனி அருமையான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தம்பி சௌந்தரராஜா வந்திருக்கிறார். தேவியை பார்க்கும் போது என்னை போன்ற வாத்தியார்கள் தான் நினைவுக்கு வருகின்றனர்."
 
"நாங்கள் பெரிய அதிகாரிகள், மருத்துவர்களை உருவாக்குவோம், கடைசி வரை வாத்தியார்களாகவே இருப்போம். ஏற்றி வைக்கும் ஏணி போன்றுதான் தேவி. அவர்கள் மூலம் ஏனியில் ஏறி பலர் நட்சத்திரங்களாக மிளிர்கின்றனர். ஆனால் ஏணியாகவே இருப்பதில் மகிழ்ச்சியாக இருப்பவர் தேவி. இப்படி ஏணியாக இருப்பது வளர்ச்சிக்கு ஏணியாய், வாழ்க்கைக்கு தோனியாய் இருக்கும் உங்களது பணி மென்மேலும் சிறக்க வேண்டும். இந்த நாடகத்தில் நடித்த ஒவ்வொருத்தரையும் தனித்தனியாக பாராட்டுகிறேன்."
 
"ஒரு சினிமா உருவாக்கப்படுவது, ஆனால் நாடகம் தான் நடிக்கப்படுவது. நாடகம் தான் செயலாக்கத்தின் உச்சக்கட்டம். சினிமாவை உருவாக்கலாம். ஆனால் நாடகம் நடித்துக்காட்டுவது. ஆதி மனிதன் முதலில் நடிக்கத் தான் செய்தான். மொழி இன்றி அவர்கள் செய்கையில் தான் தகவல் பரிமாற்றம் செய்திருப்பார்கள். இங்கிருந்து இசை, வார்த்தைகள் மற்றும் பேச்சு என எல்லாமே காலப்போக்கில் உருவானவை தான். இன்று நாம் இயல், இசை, நாடகம் என கூறுகிறோம். ஆனால் முதலில் வந்தது நாடகம் தான். அதன்பிறகு வந்தது தான் இசை, அதன்பிறகு வந்தது தான் இயல்." 
 
"மனித வாழ்வில் ஒன்றியிருப்பது நாடகம் தான். நாடக கலையை அவரது குரு முத்துசாமியின் நினைவாக நடத்தி வரும் தேவி அவர்களின் மிகச் சிறந்த பணி நிச்சயம் வெல்லட்டும், வாழட்டும். தொடர்ந்து இந்த கலையை அவர்கள் காப்பாற்றட்டும். நாடகத்தில் நடித்த எல்லாரும் சிறப்பாக நடித்தார்கள். நடித்த எல்லாருக்கும் பாராட்டுக்கள். இதை இயக்கிய அருமை சகோதரி தேவிக்கு வாழ்த்துக்கள்," என்று தெரிவித்தார்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஹம்சினி என்டர்டெயின் மென்ட் பிரைவேட் லிமிடெட் வெளியீட்டில், வெளிநாடுகளில் வெளியீட்டிற்கு முன்னதாகவே சாதனைகள் படைக்கும் தளபதி விஜய்யின் “கோட்” திரைப்படம்!