இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் (பில்டப் கொடுத்து உருவாக்கப்பட்ட எதிர்பார்ப்பு?) படமாக இருந்த ரஜினிகாந்த்- லோகேஷ் கனகராஜ் இணைந்து உருவான கூலி படம் நேற்று முன் தினம் உலகம் முழுவதும் ரிலீஸானது. படம் வெளியான முதல் காட்சியிலேயே கலவையான விமர்சனங்களைப் பெறத் தொடங்கிவிட்டது. புதிதாக எதுவும் இல்லாமல் மசாலா படங்களுக்கே உரிய அதே டெம்ப்ளேட் திரைக்கதை, கதாநாயக வழிபாடு என அரைத்த மாவையே லோகேஷ் அரைத்துள்ளார் என ரசிகர்கள் விமர்சிக்கத் தொடங்கியுள்ளனர்.
ஆனாலும் இந்த படம் முதல் நாளில் உலகம் முழுவதும் சுமார் 151 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த படத்தை வட இந்தியாவிலும் பெரிய அளவில் வியாபாரம் செய்யவேண்டும் என பாலிவுட் நடிகர் அமீர்கானை இந்த படத்தில் ஒரு சிறப்புத் தோற்றத்தில் நடிக்கவைத்தனர்.
அதற்காக அவருக்கு 20 கோடி ரூபாய் சம்பளமாகக் கொடுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் ஆமிர் கான் தரப்பு அதை மறுத்துள்ளது. ரஜினிகாந்துக்காக இந்த படத்தில் சம்பளம் எதுவும் பெறாமல் நடித்துக் கொடுத்ததாக அவர் தரப்பு விளக்கமளித்துள்ளது.
கொசுறு – படத்தில் அந்த வேடத்தில் ஏன் நடிக்க ஒத்துக்கொண்டார் என அவரின் ரசிகர்கள் சமூகவலைதளங்களில் புலம்பி வருகின்றனர்.