தனுஷ் நடித்த அசுரன்’ திரைப்படம் நாளை வெளியாகவிருக்கும் நிலையில் ஏற்கனவே தனுஷ் ரசிகர் மன்ற நிர்வாகிகள் ‘அசுரன்’ ரிலீசின்போது ரசிகர்கள் யாரும் பேனர் வைக்க வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளனர் என்பது தெரிந்ததே
இந்த நிலையில் அரசுன் படத்திற்கு பேனர் வைப்பதை தவிர்த்துள்ள நெல்லை தனுஷ் ரசிகர்கள், அதற்கு பதில் திருநங்கைகளுக்கு தையல் இயந்திரம் வழங்கி அசத்தியுள்ளனர். பேனருக்கு பதில் திருநங்கைகளுக்கு தையல் மிஷின் வழங்கும் நிகழ்ச்சியில் நெல்லை மாநகர காவல்துறை துணை ஆணையர் சரவணன் பங்கேற்று திருநங்கைகளுக்கு தையல் இயந்திரங்களை வழங்கினார்.
கடந்த மாதம் சென்னையில் சுபஸ்ரீ என்ற இளம்பெண் பேனர் விழுந்து ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தார். இதையடுத்து சமீபத்தில் ‘காப்பான்’ வெளியானபோது இதே நெல்லையில் சூர்யாவின் ரசிகர்கள் ஹெல்மெட்டுக்களை வழங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது. சூர்யாவின் ரசிகர்களை அடுத்து தற்போது தனுஷின் ரசிகர்கள் தையல் மிஷின்களை வழங்கியுள்ளனர். இதேபோல் ரஜினி, கமல், அஜித், விஜய் படங்கள் வெளியாகும்போது அவர்களுடைய ரசிகர்களும் இதுமாதிரி உருப்படியான விஷயங்களை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்படுகிறது
மேலும் பேனர் வைப்பதால் ஒருநாள் அல்லது இரண்டு நாட்கள் மட்டுமே பார்வைக்கு இருக்கும். அதன்பின் அந்த பேனர் எதற்கும் பயன்படாது. ஆனால் ஹெல்மெட், தையல் மிஷின் போன்ற பொருட்களை கொடுத்தால் அந்த நபர்களின் வாழ்நாள் முழுவதும் அவை உபயோகமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது