இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் சிம்பு நடிக்கும் படத்திற்காக தனுஷ் ராயல்டி கேட்டதாக ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் கடந்த இரண்டு நாட்களாக ஒரு வதந்தி பரவியது. இந்த வதந்தியால் எழுந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, இன்று காலை வெற்றிமாறன் ஒரு வீடியோவை வெளியிட்டார்.
அந்த வீடியோவில், "தனுஷ் ஒரு பைசா கூட கேட்கவில்லை. 'வடசென்னை' படத்தில் இருந்து எதை வேண்டுமானாலும் நீங்கள் எடுத்துக் கொள்ளலாம் என்று அவர் அனுமதி கொடுத்துவிட்டார். என்ஓசி கூட அனுப்பத் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்," என்று வெற்றிமாறன் விளக்கமளித்தார்.
தனுஷ் தரப்பிலும், "தனக்காக இரண்டு தேசிய விருதுகளை பெற்றுக்கொடுத்த இயக்குநர் அவர். அதுமட்டுமன்றி, அவர் என் சகோதரர் போன்றவர். அப்படிப்பட்ட இயக்குநரிடம் இருந்து நான் எப்படிப் பைசா வாங்குவேன்?" என்று கூறியதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
வெற்றிமாறன் இப்போதும் தனுஷைப் 'பிரபு' என்றுதான் அழைப்பார் என்றும், அவரது குடும்பத்தினர் மட்டுமே அவரது உண்மையான பெயரை அழைக்கும் அளவுக்கு தனுஷின் குடும்பத்தில் ஒருவராக வெற்றிமாறன் இருப்பதால், தனுஷ் மீது ஒரு குற்றச்சாட்டு வந்தபோது, அதற்கு கட்டாயம் பதில் சொல்ல வேண்டும் என்பதற்காகவே அவர் இந்த வீடியோவை வெளியிட்டதாகவும் திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.