தமிழ் மொழியில் தனது நடிப்பு திறமையால் இரண்டு தேசிய விருதுகளை வென்ற தனுஷ் பாலிவுட்டிலும் கால்பதித்தார். 2013 ஆம் ஆண்டு ராஞ்சனா படத்தின் மூலம் இந்தியில் அறிமுகம் ஆனார். இந்த படத்தை ஆனந்த் எல் ராய் இயக்கி இருந்தார். அதன் பின்னர் சில ஆண்டு இடைவெளிக்குப் பிறகு இந்த கூட்டணி அத்ராங்கி ரே படத்தில் இணைந்தது. இதையடுத்து அந்த கூட்டணியின் மூன்றாவது படமாக தேரே இஷ்க் மெய்ன் இன்று ரிலீஸாகியுள்ளது.
இந்த கூட்டணியின் முந்தைய இரு படங்களைப் போலவே இந்த படமும் காதலும் அதனால் ஏற்படும் வலியும் சார்ந்த படமாகவே உருவாகியுள்ளது. ஷங்கர் எனும் ஆக்ரோஷமான , பின் விளைவுகள் பற்றி யோசிக்காத இளைஞன், முக்தி என்ற அகப்பிரச்சனைகளில் தவிக்கும் பெண்ணைக் காதலிக்கிறான். ஆனால் அவர்கள் காதல் பிரச்சனையில் முடிய இருவரும் பிரிந்து வேறு வேறு பாதைகளில் பயணிக்கின்றனர்.
ஒரு இடைவெளிக்குப் பின்னர் அவர்கள் மீண்டும் சந்திக்க, இருவரும் புதிய மனிதர்களாக உள்ளனர். இப்போது அவர்களின் காதல் அவர்களை என்ன செய்கிறது? காதலுக்காக ஒரு மனிதன் எந்தளவுக்கு செல்கிறான் என்பதே தேரே இஷ்க் மெய்ன் படத்தின் கதை. தனுஷ் மற்றும் க்ரீத்தி சனோன் ஆகியோர் தங்களின் மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளதாக படம் பார்த்த ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். தமிழ்நாட்டில் இப்போதுதான் முதல் காட்சி ரிலீஸாகி ஓடிக் கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தகக்து.