தெலுங்கு இயக்குனர் நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ், கமல்ஹாசன், அமிதாப் பச்சன், தீபிகா படுகோன் உள்ளிட்ட பலர் நடித்து வெளியான படம் கல்கி 2898 ஏடி. மகாபாரத குருச்சேத்திர போரையும், அதற்கு பிறகு 6 ஆயிரம் ஆண்டுகள் கழித்து நடக்கும் கல்கியின் வருகையையும் இணைத்து உருவாக்கப்பட்ட இந்த படம் பெரும் ஹிட் அடித்து 1100 கோடி வசூலித்தது.
இந்த படத்தின் மையக் கதாபாத்திரம் ஒன்றில் தீபிகா படுகோன் நடித்திருந்தார். இரண்டாம் பாகத்திலும் அவருக்கு முக்கிய வேடம் உள்ளதாக இயக்குனர் நாக் அஸ்வின் தெரிவித்திருந்தார். இந்நிலையில் நேற்று திடீரென இரண்டாம் பாகத்தில் இருந்து தீபிகா நீக்கப்படுவதாக தயாரிப்பாளர் தரப்பு அறிவித்தது.
இது சம்மந்தமான பதிவில் “”Kalki 2898 AD படத்தின் வரவிருக்கும் தொடர்ச்சியில் தீபிகா படுகோன் நடிக்க மாட்டார் என்பதை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கிறோம். கவனமாக பரிசீலித்த பிறகு, நாங்கள் பிரிந்து செல்ல முடிவு செய்துள்ளோம். முதல் படத்தை உருவாக்கும் நீண்ட பயணம் இருந்தபோதிலும், எங்களால் ஒரு கூட்டணியைக் கண்டுபிடிக்க முடியவில்லை. Kalki 2898 AD போன்ற ஒரு படம் அந்த அர்ப்பணிப்புக்கும் இன்னும் பலவற்றிற்கும் தகுதியானது. அவரது எதிர்காலப் பணிகள் சிறப்பாக அமைய வாழ்த்துகிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் தீபிகா நீக்கப்பட்டதற்கான காரணம் பற்றி இணையத்தில் சில தகவல்கள் பரவி வருகின்றன. அதில் “முதல் பாகத்துக்கு வாங்கிய சம்பளத்தை விட 25 சதவீதம் அதிக சம்பளம், தினமும் 7 மணிநேரம் மட்டுமே பணி நேரம், தன்னுடன் வரும் 25 உதவியாளர்களுக்கு சம்பளம், உணவு மற்றும் தங்குமிட வசதி ஆகியவற்றைத் தயாரிப்பு நிறுவனம் ஏற்க வேண்டும்” போன்ற கோரிக்கைகளை வைத்ததாகவும் அதனை ஏற்க முடியாமல்தான் அவரை இரண்டாம் பாகத்தில் இருந்து நீக்கியதாகவும் சொல்லப்படுகிறது.