ஒரு திரைப்படம் அதிலும் குறிப்பாக பெரிய ஸ்டார்களின் படங்கள் வெளியானால் டுவிட்டரில் உள்ள டிராக்கர்களின் இம்சை தாங்க முடியாது. ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு மாநிலத்திலும், நகரத்தில் இவ்வளவு கலெக்சன் என உட்கார்ந்த இடத்தில் இருந்தே வசூல் தொகையை தங்கள் இஷ்டத்திற்கு பதிவு செய்து வருவதுண்டு. இதனால் அந்தந்த நடிகர்களின் கவனத்தை ஈர்ப்பது மட்டுமின்றி ஒவ்வொரு போஸ்ட்டுக்கும் ஒரு தொகையை தயாரிப்பு அல்லது விநியோகிஸ்தர்களிடம் இருந்து பெற்றுக்கொள்வதும் உண்டு. இதனை முழுநேர தொழிலாகவே பலர் செய்து வருகின்றனர்.
சமூக வலைத்தள டிராக்கர்கள் தான் இப்படி என்றால் பொங்கல் அன்று வெளியான ஒரு படத்தின் விநியோகிஸ்தரே அந்த படம் ரூ.125 கோடி வசூல் செய்ததாக ஒரு பொய்யை கட்டவிழ்த்துவிட்டு இருதரப்பு ரசிகர்களிடையே மோதலை உண்டாக்கிவிட்டார். இதனால் கோலிவுட் பிரபங்களே அந்த நிறுவனம் மீது கடுப்பில் உள்ளது.
இந்த நிலையில் 'பேட்ட' மற்றும் 'விஸ்வாசம்' படங்களுக்குக் அதிக கட்டணம் வசூலிக்க கூடாது என்று பதிவு செய்யப்பட்ட வழக்கை இன்று விசாரணை செய்த மதுரை உயர்நீதிமன்ற கிளை, 'ஜனவரி 10 முதல் 17 வரை பேட்ட, விஸ்வாசம் திரைப்படங்கள் வெளியான திரையரங்குகளின் தினசரி வசூல் அறிக்கையைத் தாக்கல் செய்ய மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவால் உண்மையான வசூலை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் இதுவரை பொய்யான கட்டுக்கதைகளை கட்டவிழ்த்துவிட்ட டிராக்கர்கள் அதிர்ச்சி அடைந்திருப்பதாக கூறப்படுகிறது.