விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மக்கள் மனங்களை கவர்ந்த பாசிட்டிவ் ஹியூமர் ஷோ குக் வித் கோமாளி இதுவரை ஐந்து சீசன்கள் வெற்றிகரமாக ஓடியுள்ளன. இப்போது, ஆறாவது சீசன் வெளியாகும் முன் அனைத்து தயாரிப்புகளும் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், புதிய சீசன் மே 4ஆம் தேதி, ஞாயிற்றுக்கிழமை இரவு 8 மணிக்கு ஆரம்பமாக இருப்பதாக விஜய் டிவி அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
முந்தைய சீசன்களில் நடுவர்களாக வெங்கடேஷ் பட் மற்றும் தாமு பணியாற்றினர். ஐந்தாவது சீசனில் வெங்கடேஷ் பட் விலகியதால், அந்த இடத்தை மாதம்பட்டி ரங்கராஜ் நிரப்பினார். அதே நேரத்தில், தொகுப்பாளினி மணிமேகலை மற்றும் போட்டியாளர் பிரியங்கா இடையே ஏற்பட்ட முரண்பாட்டால், மணிமேகலை நிகழ்ச்சியில் இருந்து விலகினார்.
இப்போது, ஆறாவது சீசனில் பிக் பாஸ் புகழ் சௌந்தர்யா கலந்து கொள்ளவுள்ளார். இவருடன் சேர்ந்து, கோமாளிகளாக புகழ், ராமர், சுனிதா மற்றும் சரத் மீண்டும் கலகலப்பை ஏற்படுத்தவுள்ளனர்.
இந்த சீசனில் தாமு மற்றும் ரங்கராஜுடன் இணைந்து மூன்றாவது நடுவராக கௌஷிக் பங்கேற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் 4ஆம் தேதி முதல் தொடங்கவிருக்கும் குக் வித் கோமாளி சீசன் 6, மற்ற சீசன்கள் போல கலகலப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.