Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பருவநிலை மாநாட்டில் நிலக்கரி பயன்பாடு தொடர்பாக சமரசம் - என்னதான் சாதிக்கும் இந்த மாநாடு?

Advertiesment
பருவநிலை மாநாட்டில் நிலக்கரி பயன்பாடு தொடர்பாக சமரசம் - என்னதான் சாதிக்கும் இந்த மாநாடு?
, சனி, 13 நவம்பர் 2021 (00:18 IST)
பிரிட்டன் நாட்டின் கிளாஸ்கோ நகரில் கடந்த 12 நாள்களாக நடந்துவரும் ஐ.நா. பருவநிலை உச்சி மாநாடு இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. ஆனால், எதிர்பார்த்தபடி தீவிரமான தீர்மானங்களை இந்த மாநாட்டில் எட்ட முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது.
 
புவியின் வெப்பநிலை தொழிற்புரட்சிக்கு முந்திய காலத்துடன் ஒப்பிடும்போது 1.5 டிகிரிக்கு மேல் உயராமல் பார்த்துக்கொள்ளவேண்டும் என்ற இலக்கினை நிறைவேற்ற இந்த மாநாடு உதவப் போவதில்லை என்ற அச்சத்தை ஐ.நா. தலைமைச்செயலாளர் அன்டோனியா கூட்டரெஷ் வெளியிட்டிருந்தார்.
 
இந்நிலையில் மாநாட்டின் இறுதியில் நிறைவேற்றுவதற்கான வரைவுத் தீர்மானத்தில் நிலக்கரி பயன்பாட்டை நாடுகள் குறைப்பது தொடர்பாக மென்மையான ஷரத்துகளே இடம் பெற்றுள்ளன.
 
இந்த வரைவு தீர்மானத்தை நாடுகள் ஏற்றுக்கொண்டால்தான் அது நிறைவேறும்.
 
நிலக்கரி தொடர்பான மொழி வரைவுத் தீர்மானத்தில் மென்மையாக்கப்பட்டுள்ள நிலையில், தங்கள் நாட்டில் கார்பன் உமிழ்வை கட்டுப்படுத்துவது தொடர்பாக நாடுகள் அளிக்கும் சொந்த இலக்குகள் தீர்மானத்தில் சேர்க்கப்படுவதே முக்கியமானதாக இருக்கும் என்று பார்க்கப்படுகிறது.
 
பருவநிலை மாற்றத்தை கட்டுப்படுத்தும் விஷயத்தில் இந்த மாநாடு முக்கியப் பங்கு வகிக்கவேண்டும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
 
இரவு முழுவதும் நடந்த பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து வெள்ளிக்கிழமை காலை வெளியிட்பட்ட வரைவுத் தீர்மானத்தில் பசுமை இல்ல வாயுக்களை வெளியிடுவதை குறைப்பதற்கான தங்கள் சொந்த திட்டத்தை வெளியிடுவதற்கு இன்னும் முன்னதான காலக்கெடு தேவை என்பதை வலியுறுத்துகிறது.
 
பருவநிலை மாற்றத்துக்கு எதிராகப் போராடும் ஏழை நாடுகளுக்கு உதவிகள் செய்யவேண்டியது தொடர்பாகவும் இந்த வரைவு அறிக்கை வலுவாகப் பேசுகிறது.
 
இறுதி ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தை வெள்ளிக்கிழமை இரவு நெடுநேரம் நீடிக்கலாம். அல்லது அதற்கு மேலும் நீடிக்கலாம் என்று கருதப்படுகிறது.
 
பருவநிலை மாற்றம்: பேரழிவுக்கு காரணம் மனிதர்கள் என்பதற்கு ஆதாரம் என்ன?
அடுத்த சில மணி நேரங்கள் புதிய விடியலைத் தீர்மானிக்கப் போகின்றன என்று கிரெனடா நாட்டு பருவநிலை அமைச்சர் சைமன் ஸ்டியல் தெரிவித்துள்ளார். இந்த சின்னஞ்சிறு தீவு நாடு பருவநிலை மாற்றத்தால் ஆபத்தை எதிர்கொண்டுள்ளது.

"பல தரப்பில் இருந்தும் வரும் அழுத்தத்தை தங்கிப் பிடித்து இந்த வரைவு அறிக்கை நிறைவேற்றப்படுமானால், 1.5 டிகிரிக்குள் வெப்ப நிலை உயர்வை கட்டுப்படுத்தும் இலக்கு நம் விரல் நகப்பிடியில் இருக்கும்," என்று அவர் கூறினார்.
 
ஆனால், புதைபடிவ எரிபொருள்களை நம்பியிருக்கும் நாடுகள் வரைவுத் தீர்மானத்தை மேலும் திருத்த முயற்சி செய்யலாம்.
 
பருவநிலை பாதுகாப்பு குழுக்கள் எச்சரிக்கையோடு வரைவுத் தீர்மானத்தில் எட்டப்பட்டுள்ள முன்னேற்றங்களை வரவேற்கின்றன.
 
"நிலக்கரி, புதைபடிவ எரிபொருள் பயன்பாட்டை ஒழிப்பது தொடர்பான முக்கிய வரி பலவீனப்படுத்தப்பட்டுவிட்டது. ஆனால், அந்த வரி இருக்கிறது. இந்த மாநாடு முடியும் முன்பு அந்த வரி வலுப்படுத்தப்படவேண்டும்," என்கிறார் கிரீன் பீஸ் அமைப்பைச் சேர்ந்த ஜெனிஃபர் மோர்கன்.
 
ஆனால், முக்கிய விஷயங்களில் இந்த வரைவுத் தீர்மானம் பின்னோக்கி சென்றுவிட்டது" என்கிறது வேர்ல்ட் வைல்ட் லைஃப் பவுண்டேஷன். ஆனால், 2022ம் ஆண்டு பருவநிலை இலக்குகளை கொஞ்சம் அதிகரிப்பது என்பது என்கிற பகுதியை அது வரவேற்கிறது. இது முக்கியமான சமிக்ஞை என்கிறது அந்த அமைப்பு.
 
வரைவு தீர்மானத்தில் பல ஊக்கமளிக்கும் பல விஷயங்கள் உள்ளன. ஆனால், வேண்டிய அளவுக்கு எந்த விஷயத்திலும் லட்சியவாதம் இல்லை என்கிறார் லண்டன் யூனிவர்சிட்டி காலேஜை சேர்ந்த பேராசிரியர் ஜிம் வாட்சன்.
 
1.5 டிகிரிக்கு மேல் வெப்பநிலை அதிகரிக்காமல் காக்கவேண்டும் என்றால் 2030ம் ஆண்டுக்குள் கார்பன் உமிழ்வுகள் 45 சதவீதம் குறைக்கப்படவேண்டும். நிகர ஜீரோ இலக்கு 2050ல் எட்டப்படவேண்டும்.
 
வெப்பநிலை 2 டிகிரிக்கு மேல் அதிகரித்தால் அதனால், ஏற்படக்கூடிய மோசமான பாதிப்புகளுக்கு ஒரு உதாரணம் சொல்லவேண்டும் என்றால் உலகில் உள்ள எல்லா பவழப்பாறைகளும் அழிந்துவிடும் என்கிறார்கள் விஞ்ஞானிகள்.
 
 
பசுமை இல்ல வாயுகளை குறைப்பதற்கு நாடுகள் தாங்களே ஏற்றுக்கொண்ட பங்களிப்பு குறித்து முன்பு 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை அறிவிக்கவேண்டும் என்று இருந்தது. இப்போது அடுத்த ஆண்டு பருவநிலை மாநாட்டுக்கு முன்பு நாடுகள் அதனை அளிக்கவேண்டும் என்று வரைவுத் தீர்மானத்தில் உள்ளது.
 
வளர்ந்த நாடுகளே கார்பன் உமிழ்வுக்கு காரணமாகும் நிலையில், அதன் பாதிப்புகளை ஏழை நாடுகளே எதிர்கொள்கின்றன. எனவே, பணக்கார நாடுகள் இந்த விஷயத்தில் ஏழை நாடுகளுக்கு உதவி செய்யவேண்டும் என்பது தொடர்பான தீர்மானமும் வரைவு அறிக்கையில் இடம் பெற்றுள்ளது முக்கியமாகப் பார்க்கப்படுகிறது.
 
 
மாநாட்டில் இதுவரை ஒப்புக்கொள்ளப்பட்டவை என்ன?
பல நாடுகளின் குழுக்கள் இதுவரை ஒப்புக் கொண்ட விஷயங்கள்:
 
புவி வெப்பநிலை 1.5 டிகிரிக்கு மேல் அதிகரிக்காமல் தடுக்க இந்த பத்தாண்டு காலம் சேர்ந்து பாடுபட அமெரிக்காவும் சீனாவும் கூட்டாக ஒப்புக்கொண்டன.
 
2030க்குள் காடழிப்பை நிறுத்தவும், காடு வளர்ப்பை மேற்கொள்ளவும் 100 நாடுகளின் தலைவர்கள் வாக்குறுதி அளித்துள்ளனர். இதில் அமேசான் காடுகள் இடம் பெற்றுள்ள பிரேசிலும் அடக்கம்.
 
2030க்குள் பசுமை இல்ல வாயுவான மீத்தேன் உமிழ்வை குறைக்க அமெரிக்காவும், ஐரோப்பிய ஒன்றியமும் கூட்டாக செயல்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 
நிலக்கரி பயன்பாட்டில் இருந்து விலகிச் செல்ல 40 நாடுகள் வாக்குறுதி அளித்துள்ளன. ஆனால், முக்கிய நிலக்கரி பயன்பாட்டாளர்களான அமெரிக்காவும், சீனாவும் இதில் கையெழுத்திடவில்லை,.
 
பருவ நிலை மாற்றத்தை சமாளிக்க வளரும் நாடுகளுக்கு வளர்ந்த நாடுகள் குறிப்பிட்ட நிதித் தொகுப்பை ஒதுக்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது போதாது என்று பலர் கருதுகின்றனர்.
 
எண்ணெய், எரிவாயு பயன்பாட்டை முடிவுக்கு கொண்டுவரவும், புதிய எண்ணெய், எரிவாயு வளங்களை கண்டுபிடிக்கும் பணியை நிறுத்தவும் நாடுகள் தேதி குறிக்கவேண்டும் என்பதற்கு ஆதரவாக ஒரு கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அஜித்குமார் ரசிகர்கள் வெளியிட்ட காலண்டர்!