நடிகர் விஜய்யின் பீஸ்ட் திரைப்பட ட்ரெய்லர் வெளியாகியுள்ள நிலையில் அதை வைத்து அரசியல் பகடி செய்யப்படுவது குறித்து எச்சரிக்கப்பட்டுள்ளது.
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் பீஸ்ட். சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்த படம் ஏப்ரல் 13ம் தேதி ரிலீஸாக உள்ளது. இந்நிலையில் சமீபத்தில் பீஸ்ட் பட ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வைரலாகி வருகிறது.
இந்த ட்ரெய்லரில் ஆரம்ப காட்சியிலேயே விஜய் காவி நிற துணியை கத்தியால் கிழிப்பது போன்ற காட்சி உள்ளது. அதை ஸ்க்ரீன்ஷாட் எடுத்து பிரபல தேசிய கட்சியுடனும், தேசிய கட்சி தலைவருடனும் ஒப்பிட்டு நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் மீம்ஸ், ட்ரோல் பதிவுகளை இட்டு வருகின்றனர்.
இந்த விவகாரம் விஜய் கவனத்திற்கு சென்றுள்ள நிலையில் உடனடி எச்சரிக்கை விடுத்துள்ள விஜய் மக்கள் இயக்க தலைவர் புஸ்ஸி ஆனந்த் “அரசு பதவிகளில் உள்ளோர், அரசியல் தலைவர்கள் மற்றும் யாரையும் எக்காலத்திலும் இழிவுபடுத்தும் விதமாக விஜய் மக்கள் இயக்கத்தினர் எந்த ஒரு ஊடகத்திலும் பதிவிடக்கூடாது. இதை ஏற்கனவே பலமுறை தெரிவித்துள்ளதோடு மீறி செயல்படுபவர்களை இயக்கத்தை விட்டு நீக்கியும் உள்ளோம்.
இருப்பினும், நம் தளபதி அவர்களின் அறிவுறுத்தலை மீறி யாரேனும் செயல்பட்டால் அவர்களை இயக்கத்தை விட்டு நீக்குவதோடு, சட்ட நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்பதை தெரியப்படுத்திக் கொள்கிறேன்” என அறிக்கை வெளியிட்டுள்ளார்.