தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஜய், சில தினங்களுக்கு முன்னர் தன்னுடைய அரசியல் வருகையை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். விஜய் தொடங்கியுள்ள அரசியல் கட்சியின் பெயர் தமிழக வெற்றி கழகம் என பெயரிடப்பட்டுள்ளது.
இது சம்மந்தமான அறிவிப்பில் தான் ஏற்கனவே ஒத்துக்கொண்ட இன்னும் ஒரு படத்தை மட்டும் நடித்து முடித்துவிட்டு அதன் பின்னர் முழுமையாக மக்கள் சேவைக்கு வரவுள்ளதாகக் கூறியிருந்தார். இப்போது The GOAT திரைப்படத்தில் நடித்து வரும் விஜய், இதன் பின்னர் தனது 69 ஆவது படத்தில் நடிப்பார் என தெரிகிறது.
விஜய்யின் அரசியல் வருகை குறித்து சக நடிகர்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நடிகர் போஸ் வெங்கட் விஜய்யின் அரசியல் வருகை குறித்து விமர்சனத்தை வைத்துள்ளார். அவர் அளித்துள்ள ஒரு பேட்டியில் “விஜய்யை விஜயகாந்தோடு ஒப்பிட முடியாது. விஜயகாந்த் பிறவியிலேயே அரசியல்வாதி. நடிகர் சங்க பிரச்சனையின் போது தலைவராக இருந்து அதன் கடனை தீர்த்தவர். அதே போல விஜய் தான் சார்ந்த நடிகர் சங்க பிரச்சனைக்காவது குரல் கொடுத்துள்ளாரா?
விஜய் ஒரு மேடை ஏறி பேசட்டும். அது யாராவது எழுதிக் கொடுத்ததாக இருந்தாலும் பரவாயில்லை. அப்போது அவர் யார் பக்கம் என்பது தெரிந்துவிடும்” எனக் கூறியுள்ளார்.