இயக்குனர் செல்வராகவனின் சமீபத்தைய படங்கள் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. அதுமட்டுமில்லாமல் மோசமான விமர்சனங்களையும் பெற்று வருகின்றன. இந்நிலையில் இப்போது அவர் தனுஷ் நடிப்பில் நானே வருவேன் படத்தை இயக்கி இருந்தார். அடுத்து அவர் தன்னுடைய எவர்க்ரீன் ஹிட் படமான 7ஜி ரெயின்போ காலணி திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க திட்டமிட்டு அதற்கான வேலைகளை மேற்கொண்டு வருகிறார்.
செல்வராகவன் இயக்கத்தில் தொடங்குவதாக இருந்த கைவிடப்பட்ட படங்கள் ஏராளம். விக்ரம்மை வைத்து சிந்துபாத், சிம்புவை வைத்து கான், சந்தானத்தை வைத்து மன்னவன் வந்தானடி ஆகிய திரைப்படங்கள் அவர் இயக்கத்தில் பாதியிலேயே கைவிடப்பட்ட திரைப்படங்கள்.
இந்நிலையில் இப்போது அவர் இயக்க இருந்த மற்றொரு திரைப்படம் பற்றி நடிகர் பரத் ஒரு தகவலைக் கூறியுள்ளார். அதன்படி “செலவராகவன் இயக்கத்தில் அஜித் மற்றும் தனுஷ் நடிக்க இருந்த படத்துக்கான பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதில் நான் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க இருந்தேன். ஆனால் அந்த திரைப்படம் பல்வேறு காரணங்களால் நடக்கவில்லை. அது நடந்திருந்தால் என் திரைவாழ்க்கையில் மிக முக்கியமான படமாக இருந்திருக்கும்” என ஒரு நேர்காணலில் கூறியுள்ளார்.