திரைப்பட படப்பிடிப்புகளில் உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு உதவி செய்வதற்காக நிதி திரட்ட இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் முடிவு செய்துள்ளார்.
கடந்த சில காலமாக படப்பிடிப்பு தளங்களில் பணியாளர்கள் உயிரிழக்கும் சம்பவம் தொடர்கதையாகி வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சில ஆண்டுகள் முன்னதாக இந்தியன் – 2 படப்பிடிப்பின்போது க்ரேன் அறுந்து விழுந்ததில் இருவர் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சமீபத்தில் வெற்றிமாறன் படத்திற்கான படப்பிடிப்பில் சண்டை பயிற்சியாளர் விபத்தில் இறந்த சம்பவம் நடந்தது.
இந்நிலையில் படப்பிடிப்பில் பணியாளர்கள் உயிரிழப்பது குறித்து பேசிய பெப்சி சங்க தலைவர் ஆர்.கே.செல்வமணி “பெரிய நடிகர்களின் படப்பிடிப்பில் விபத்தில் பணியாளர்கள் இறந்தால் அந்த பெரிய நடிகர்களோ, தயாரிப்பாளர்களோ ஒரு கணிசமான உதவித்தொகையை பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு வழங்குகின்றனர். ஆனால் சின்ன படங்களுக்கான படப்பிடிப்பில் அப்படி உயிர்பலி ஏற்பட்டால் அவர்களால் சரியான இழப்பீடை தர முடிவதில்லை.
சமீபத்தில் ஏர்.ஆர்.ரகுமானின் ஸ்டுடியோவில் ஏற்பட்ட விபத்தில் லைட்மேன் ஒருவர் பலியானார். அவர் குடும்பத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் நிதியுதவி செய்துவிட்டபோதும் அவர் அதை நினைத்து கவலையாகவே இருந்தார். இதுகுறித்து பெப்சிக்கு கடிதம் எழுதிய அவர் லைட்மேன்கள் விபத்துக்கு உட்பட்டால் அல்லது இறந்தால் அவர்களுக்கு இழப்பீடு வழங்க நிதி திரட்ட விரும்புவதாகவும், இதற்காக இசை நிகழ்ச்சி ஒன்றை நடத்த நினைப்பதாகவும் தெரிவித்தார்.
அதன்படி மார்ச் மாதம் இந்த இசை நிகழ்ச்சி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளது. இதில் பெறப்படும் நிதி மற்றும் நன்கொடை சினிமா லைட்மேன் உள்ளிட்ட ஊழியர்கள் விபத்துக்குள்ளானால் மருத்துவ உதவி, உயிரிழந்தால் இழப்பீடு ஆகியவற்றிற்கு பயன்படுத்தப்படும். ஏ.ஆர்.ரகுமான் தானாக முன்வந்து சினிமா பணியாளர்களுக்காக செய்யும் இந்த உதவிக்கு பெப்சி சார்பாக நன்றி தெரிவிக்கிறோம்” என கூறியுள்ளார்.