கத்தி கதையை தன்னுடையது என 4 வருடங்களாக போராடி வந்த உதவி இயக்குனர் அன்புராஜ் இன்று முருகதாஸுக்கு எதிராக குடும்பத்துடன் உண்ணாவிரதத்தை தொடங்கியுள்ளார்.
சர்கார் கதை தன்னுடையது என வருண் ராஜேந்திரன் என்பவர் கூற, ஆமாம்.. இரு கதையும் ஒன்றுதான் என சினிமா எழுத்தாளர் சங்க தலைவர் பாக்யராஜ் கூற, அதை முருகதாஸ் மறுக்க.. கடந்த சில நாட்களாகவே தமிழ் சினிமா பரபரப்பாக இருந்தது. நேற்று நீதிமன்றத்தில் சமரசம் ஏற்பட்டதாகவும், கதை வருணுடையது என முருகதாஸ் ஏற்றுக்கொண்டதாகவும், படத்தின் தலைப்பில் வருணுக்கு மரியாதை செய்யப்படும் எனவும் முருகதாஸ் தரப்பில் நீதிமன்றத்தில் கூறப்பட்டது.
எனவே, முருகதாஸ் கதையை திருடிவிட்டார் என பலரும் விமர்சிக்க.. சர்கார் படத்தின் கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் நான்தான் என முருகதாஸ் வீடியோ வெளியிட்டுள்ளார்.
ஒருவழியாக சர்கார் பஞ்சாயத்து முடிவுக்கு வந்துள்ள நிலையில், முருகதாஸுக்கு அடுத்த சிக்கல் தொடங்கியுள்ளது. விவசாயியான அன்பு ராஜசேகர் விவசாயத்தை மையமாக வைத்து தாகபூமி என்கிற குறும்படத்தை இயக்கியிருந்தார். அதன் கருவை திருடியே முருகதாஸ் கத்தி படத்தை எடுத்துள்ளார் என அவர் கடந்த 4 வருடங்களாக கூறி வருகிறார்.
ஆனால், இதுவரை தனக்கு நியாயம் கிடைக்கவில்லை எனக்கூறும் அன்புராஜ், இன்று சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே தனது குடும்பத்துடன் உண்ணாவிரதம் இருக்கப்போவதாக நேற்றே அறிவித்திருந்தார். அதன்படி, இன்று காலை குடும்பத்துடன் அவர் உண்ணாவிரதத்தை துவங்கியுள்ளார்.
ஏற்கனவே, சர்கார் விவகாரத்தில் பெயரை கெடுத்துக்கொண்ட முருகதாஸுக்கு இந்த விவகாரம் மேலும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.