தீபாவளி மற்றும் பொங்கல் போன்ற பண்டிகைக் காலங்களில் திரையரங்குகளில் அதிகாலை மற்றும் காலை சிறப்புக் காட்சிகள் திரையிடுவது வழக்கம்.
பெரிய நடிகர்கள் மற்றும் விழாக்காலங்களில் நகர்ப்புற மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள திரையரங்குகளில் ரசிகர்களின் வலியுறுத்தலால் சிறப்புக்க்காட்சி திரையிடுவது வாடிக்கைதான். ஊர்ப்புறங்களில் ரசிகர் ஷோ என்று அழைக்கப்படும் இந்த சிறப்புக்காட்சிகள் அதிகாலை 5 மணிக்காட்சி மற்றும் காலை 8 மணிக்காட்சியாக திரைபிடப்பட்டு தியேட்டர்கள் திருவிழாக்கோலம் காணும். ஆனால் இந்த சிறப்புக்காட்சிகளை உரிய அனுமதியின்றி பலதியேட்டர்கள் திரையிடுவதாலும் அனுமதிக்கப்பட்ட கட்டண அளவைவிட அதிகமாக வசூல் செய்வதும் வரி ஏய்ப்பு செய்வதாகவும் ஒருதரப்பிலிருந்து புகார்கள் வந்துகொண்டிருக்கின்றன.
இது தொடர்பாக சென்னையைச் சேர்ந்த தேவராஜன் உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளார். அதில் விடுமுறைக் காலங்களில் தியேட்டர்கள் அதிகாலை 5 மணிக்கே காட்சிகளை திரைய்யிட்டு அநியாய விலையில் டிக்கெட் விற்று வரி ஏய்ப்பு செய்கின்றன எனப் புகார் கூறியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் ஒளிப்பதிவு சட்டத்தை மீறி அதிகமானக் காட்சிகள் திரையிடும் தியேட்டர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிட்டுள்ளது. மேலும் பண்டிகை நாட்களில் கலெக்டர்களின் அனுமதி பெற்று மட்டுமே சிறப்புக்காட்சிகள் நடத்த வேண்டுமெனவும் அறிவுறுத்தியுள்ளது.
அதுமட்டுமல்லாமல் வரி ஏய்ப்பு செய்யும் திரையரங்குகளை கண்டறிந்து சட்டப்படி நடவடிக்கை எடுக்கக்கூறியும் வலியுறுத்தியுள்ளது. இதன் மூலம் திபாவளிக்கு வெளியாகும் சர்கார் திரைப்படத்திற்கான சிறப்புக்காட்சிகள் எந்தந்த திரையரங்குகளில் திரையிடப்படும் எனத் தெரியாமல் விஜய் ரசிகர்கள் அதிருப்தியடைந்துள்ளனர். இப்போதுதான் கதைதிருட்டு விவகாரத்தில் இருந்து சர்கார் தப்பித்து தீபாவளி ரிலீஸுக்கு ரெடியாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.