தமிழகத்தில் இப்போது உள்ள அரசியலில் மாற்றம் கொண்டு வருவது என்பது சாதாரண விஷயம் இல்லை. கடவுளே கட்சி ஆரம்பித்து வந்தாலும் ஓட்டுக்கு பணம் கொடுக்காமல் வெற்றி பெற முடியாது. என்னதான் 'எங்கள் வாக்கு விற்பனைக்கு இல்லை' என்று சமூக வலைத்தளங்களில் டிரெண்ட் ஆனாலும் ஓட்டுக்கு பணம் கொடுப்பதை அரசியல்வாதிகளும் நிறுத்தப்போவதில்லை, பணம் வாங்குவதை சிலரை தவிர மக்களும் நிறுத்தபோவதில்லை. எனவே அரசியலுக்கு வந்து மாற்றத்தை ஏற்படுத்துவேன் என்று கூறுபவர்களை மக்கள் நம்ப தயாராக இல்லை என்பதே உண்மையான நிலவரம்
இந்த நிலையில் அஜித்தை அரசியலுக்கு வருமாறு இயக்குனர் சுசீந்திரன் அழைப்பு விடுத்துள்ளார். ஒரு திரைப்படத்தை எப்படியெல்லாம் புரமோஷன் செய்யலாம் என யோசித்ததின் விளைவுதான் இந்த அழைப்பு. அஜித்தும், அவரது ரசிகர்களும் அரசியலே வேண்டாம் என ஒதுங்கி நிற்கும் நிலையில் இந்த அழைப்பு தேவையில்லாத ஒன்று என்றே அஜித் ரசிகர்கள் பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.
அதுமட்டுமின்றி சுசீந்திரனுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் #அரசியல்வேண்டாம்அஜித்தேபோதும் என்ற ஹேஷ்டேக்கையும் அஜித் ரசிகர்கள் டிரெண்டுக்கு கொண்டு வந்துள்ளனர். இயக்குனர் சுசீந்திரன் தனது 'கென்னடி கிளப்' படத்தை விளம்பரப்படுத்த அஜித் பெயரை தேவையில்லாமல் இழுக்க வேண்டாம் என்று பெரும்பாலான அஜித் ரசிகர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.