நடிகர் விஜய்யின் 27வது ஆண்டு திரைப்பயணத்தை அவரது ரசிகர்கள் கொண்டாடிக் கொண்டிருக்கும் வேளையில் நடிகர் அஜித்குமார் குறித்த ஹேஷ்டேகை பதிவிட்டு இணைய சண்டையை தொடங்கியிருக்கிறார்கள்.
தளபதி விஜய் மற்றும் தல அஜித் ரசிகர்கள் இடையே அடிக்கடி மோதல்கள் ஏற்பட்டு வருகின்றன. ஆரம்ப காலங்களில் தியேட்டர்களில் மல்லுக்கு நின்று கொண்டிருந்தவர்கள் தற்போது டிஜிட்டல் தொழில்நுட்பத்துக்கு மாறிவிட்டார்கள்.
அஜித் பட ட்ரெய்லர், பிறந்த நாள் போன்றவற்றிற்கு அஜித் ரசிகர்கள் தேசிய அளவில் ட்விட்டர் ஹேஷ்டேக் ட்ரெண்ட் செய்தால் அவர்களுக்கு போட்டியாக விஜய் ரசிகர்களும் விஜய் குறித்த ஹேஷ்டேகுகளை ட்ரெண்ட் செய்வார்கள். விஜய் குறித்து விஜய் ரசிகர்கள் ட்ரெண்ட் செய்தாலும் அதற்கு எதிராக அஜித் ரசிகர்கள் எதையாவது ட்ரெண்ட் செய்வார்கள்.
இந்நிலையில் 1992ல் விஜய் நடித்த முதல் படமான ’நாளைய தீர்ப்பு’ வெளியாகி இன்றுடன் 27 ஆண்டுகள் முடிவடைகிறது. விஜய்யின் இந்த 27 வருட திரை வாழ்க்கையை கொண்டாடும் விதமாக அவரது ரசிகர்கள் #27YrsOKwEmperorVIJAY என்ற ஹேஷ்டேகை ட்ரெண்ட் செய்தனர். இந்திய அளவில் இந்த ஹேஷ்டேக் ட்ரெண்டிங்கில் வந்தபோது அஜித் ரசிகர்கள் உள்ளே புகுந்து #மக்கள்தலைவன்அஜித் என்ற ஹேஷ்டேகை ட்ரெண்ட் செய்ய தொடங்கினார்கள்.
தற்போது யாருடைய ஹேஷ்டேக் இந்திய அளவில் முதலிடம் பெறும் என இருதரப்பு ரசிகர்களிடையேயும் மோதல் உருவாகியிருக்கிறது. எதற்காக தேவையில்லாமல் இப்படி சமூக வலைதளங்களில் மோதி கொள்ள வேண்டும் என நடுநிலையான சில நபர்கள் சொன்னாலும் இருதரப்பினரும் விடாமல் ஹேஷ்டேக் மோதலை தொடர்ந்து வருகிறார்கள்.