ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு 'பீட்டா' அமைப்பு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்த எதிர்ப்பு காரணமாக உச்ச நீதிமன்றம் ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்தது. இந்த 'பீட்டா' அமைப்பில் நடிகை திரிஷா முக்கிய உறுப்பினராக உள்ளார்.
இதனை தொடர்ந்து நடிகை திரிஷாவுக்கு எதிராக தமிழகம் முழுவதும் கண்டனங்களும், ஆர்ப்பாட்டங்களும் நடைபெற்று வருகின்றன. சமூக வலைத்தளங்களிலும் எதிர்ப்பு வலுத்து வருகிறது. மேலும் டுவிட்டரில் இருந்து விலகுவதாக திரிஷா அறிவித்துள்ளார்.
சிவகங்கை பகுதியில் நடந்த திரிஷாவின் 'கர்ஜனை' படப்பிடிப்பு ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள் முற்றிகை காரணமாக ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் திண்டுக்கல்லில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த நடிகர் கருணாஸ் 'பீட்டா' அமைப்புக்கு ஆதரவளிக்கும் நடிகை த்ரிஷாவுக்கு கடும் கண்டனங்களை தெரிவிக்கிறேன். அவர் இவ்வாறு தொடர்ந்தால் அவரது படப்பிடிப்பு நடைபெறுவதை தடுத்து நிறுத்துவோம். நடிகர் சங்க துணைத் தலைவர் என்ற அடிப்படையில் த்ரிஷாவுக்கு கண்டனம் தெரிவிக்கிறேன் என்று கூறியுள்ளார்.
நடிகர் சங்க துணைத் தலைவர் பொறுப்பில் இருக்கும் கருணாஸ் த்ரிஷாவுக்கு எதிராக கருத்து தெரிவித்திருப்பது திரையுலக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.