தமிழ் திரைப்பட நகைச்சுவை நடிகரான சூரி காவலர்களிடம் ஆட்டோகிராப் வாங்கிய சம்பவம் ட்ரெண்டாகி உள்ளது.
தமிழகம் முழுவதும் கொரோனா காரணமாக கடந்த மார்ச் மாதம் முதலாக மக்கள் வீடுகளில் முடங்கி கிடக்கின்றனர். பல்வேறு தொழில்களும் நலிவடைந்துள்ளன. அப்படிப்பட்ட ஊரடங்கு காலங்களிலும் சாலைகளிலும், தெருக்களிலும் காவல் பணியை தொடர்ந்து வருகிறது காவல்துறை.
இந்நிலையில் திருவெல்லிக்கேணி காவல் நிலையத்திற்கே சென்று அங்குள்ள காவலர்களை சந்தித்து ஆட்டோகிராப் வாங்கியுள்ளார் நடிகர் சூரி. இதுகுறித்து பேசிய நடிகர் சூரி “உலகமே கொரோனா வைரஸை கண்டு அஞ்சி நடுங்கியிருக்கும் சூழலில் உயிரை பொருட்படுத்தாது 24 மணி நேரமும் காவல் பணியில் ஈடுபட்டு வருவதோடு, மக்களுக்கு விழிப்புணர்வையும் போலீஸார் ஏற்படுத்தி வருகின்றனர். இதுவரை 60 போலீஸார் கொரோனாவால் பாதிப்படைந்துள்ளனர். அவர்கள் அனைவரும் குணமடைய வேண்டி கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.
மேலும் “சினிமாவில்தான் நாங்கள் கதாநாயகர்கள். உண்மையில் காவல்துறையினர்தான் கதாநாயகர்கள். அவர்களை சந்தித்து நன்றி கூறி ஆட்டோகிராப் வாங்கி செல்லவே வந்தேன். இந்த நினைவுகள் என்றும் என் மனதில் நிலைத்திருக்கும்” என கூறியுள்ளார்.