வடிவேலுவைப் போலவே ஹீரோ ஆசைகொண்ட சந்தானம், இருந்ததையும் இழந்துவிட்டு நிற்கிறார்.
வடிவேலு திரையில் தோன்றினாலே போதும். அவரின் பாடி லாங்குவேஜைப் பார்த்தாலே பாதி ரசிகர்களுக்கு சிரிப்பு வந்துவிடும். அவர் என்ன டயலாக் சொன்னாலும், மொத்தக் கூட்டமும் வயிறுவலிக்க சிரிக்கும். ஆனால், எல்லாவற்றுக்கும் தானாகவே ஆப்பு வைத்துக் கொண்டார் வடிவேலு. ஹீரோவாகத்தான் நடிப்பேன் என்ற பிடிவாதமும், தேவையில்லாத அரசியலும் சேர்ந்து, அவரின் வாழ்க்கையில் பூகம்பத்தை ஏற்படுத்திவிட்டன. அதிலிருந்து மீண்டுவர படாதபாடு படுகிறார் வடிவேலு.
சந்தானத்தின் நிலையும் ஏறக்குறைய இதுதான். என்ன ஒன்று, அரசியல் பக்கம் தலைகாட்டவில்லை சந்தானம். காலையில் ஒரு கால்ஷீட்டும், மாலையில் ஒரு கால்ஷீட்டுமாக ஒரே நாளில் இரண்டு படங்களில் காமெடியனாக நடித்தவர் சந்தானம். பொல்லாத ஹீரோ ஆசைவந்து தொலைக்க, ஓரிரு படங்களிலும் நடித்தார். ஆனால், எதிர்பார்த்த அளவுக்கு அந்தப் படங்கள் போகவில்லை. அவர் அடுத்ததாக நடித்துள்ள ‘சர்வர் சுந்தரம்’, தயாரிப்பாளரின் பைனான்ஸ் பிரச்னை காரணமாக எப்போது ரிலீஸாகும் எனத் தெரியாமல் முடங்கிக் கிடக்கிறது.
இதனால், அடுத்தடுத்து அவர் நடித்துவரும் ‘சக்க போடு போடு ராஜா’, ‘ஓடி ஓடி உழைக்கணும்’, ‘மன்னவன் வந்தானடி’ படங்களும் பாதியிலேயே நிற்கின்றன. ஒரு வாரத்தில் வெளியாகும் படங்களில், குறைந்தது இரண்டு படங்களிலாவது காமெடியனாக நடித்திருப்பார் சந்தானம். இப்போது அவர் படம் ரிலீஸாகி ஒரு வருடத்துக்கு மேல் ஆகிவிட்டது.