பாய்ஸ் என்ற திரைப்படத்தில் அறிமுகமாகி அதன்பின்னர் தமிழ் தெலுங்கு இந்தி உள்பட பல திரைப்படங்களில் நடித்தவர் நடிகர் சித்தார்த். அடுத்து மணிரத்னம் இயக்கிய ஆயுத எழுத்து படத்திலும் நடித்தார். ஆனால் அதன் பின்னர் சொல்லிக்கொள்ளும் படியான வெற்றிகள் அவருக்குக் கிடைக்கவில்லை. கடந்த சில வருடங்களாக சித்தார்த் நடித்த படங்கள் வெற்றி பெறாத நிலையில் இப்போது இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் அவர் கதாநாயகனாக நடித்து தயாரித்து சில மாதங்களாக ரிலீஸ் ஆகாமல் காத்திருந்த சித்தா திரைப்படத்தின் செப்டம்பர் 28 ஆம் தேதி ரிலீஸ் ஆகியுள்ளது. இந்த படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சிகளில் இப்போது சித்தார்த் கலந்துகொண்டு வருகிறார்.
அதன் ஒரு கட்டமால கர்நாடகாவின் பெங்களூருவில் ப்ரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட சித்தார்த்திடம் காவிரி போராட்ட அமைப்பினர் சித்தார்த் பேசிக்கொண்டிருந்த போது வந்து ஆர்ப்பாட்டம் செய்து அவரை வெளியேற கோஷமிட்டனர். இதையடுத்து சித்தார்த் நிகழ்ச்சியில் இருந்து பாதியிலேயே வெளியேறினார்.
இந்த சம்பவத்தைக் கண்டித்துள்ள பிரகாஷ் ராஜ் “நீண்டகாலமாக தீர்க்காமல் இருக்கும் பிரச்சனையை தீர்க்காமல் வைத்திருக்கும் அனைத்துக் கட்சிகளையும், ஒன்றிய அரசை தலையிட வைக்க அழுத்தம் கொடுக்காத எம். பி.க்களையும் கேட்காமல் சித்தார்த் போன்ற கலைஞர்களிடம் இப்படி நடந்து கொள்வது ஏற்றுக்கொள்ள தக்கதல்ல. ஒரு கன்னடராக அனைத்து கன்னட மக்களின் சார்பாக மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்” எனக் கூறியுள்ளார்.