Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சென்னையில் செம்பொழில் கிராமத்துத் திருவிழாவில் கலந்துகொண்ட, நடிகர் கார்த்தி!!

சென்னையில் செம்பொழில் கிராமத்துத் திருவிழாவில் கலந்துகொண்ட, நடிகர் கார்த்தி!!

J.Durai

, சனி, 28 செப்டம்பர் 2024 (18:31 IST)
கிராமத்து மண் வாசனையை, நகரத்து மக்களுக்கு அறிமுகப்படுத்தும் வகையில், நம் பாரம்பரியத்தை, நம் விளையாட்டுக்கள், கலைகள், உணவுகள் என அனைத்தையும் கொண்டாடும் விதத்தில், செம்பொழில் குழு சென்னை YMCA மைதானத்தில் பிரம்மாண்டமாக, கிராமத்துத் திருவிழாவை நடத்தி வருகிறது. இவ்விழாவினில் சிறப்பு விருந்தினராக நடிகர் கார்த்தி இன்று கலந்துகொண்டார். 
 
தமிழகத்தின் பல கிராமங்களிலிருந்து தாங்கள் விளைவித்த பொருட்களை விவசாயிகள் இங்குக் கடை விரித்துள்ளனர். இந்த திருவிழாவில் கிராமத்து உணவுகள், சிறு தானிய உணவுகள், மாட்டு வண்டி, ஒயிலாட்டம், மயிலாட்டம் என ஒரு திருவிழாவில் காணக்கிடைக்கும் அனைத்தும் உள்ளது. இத்திருவிழா சனி, ஞாயிறு என அடுத்த இரண்டு நாட்களும் நடைபெறவுள்ளது. 
 
இவ் விழாவில் கலந்துகொண்ட 
நடிகர் கார்த்தி பேசியதாவது…...
 
கோடை விடுமுறைக்கு ஊருக்கு போவது அவ்வளவு பிடிக்கும், ஊரை விட்டு வர மனசே வராது. அந்த மாதிரி கதை என்பதால் தான் மெய்யழகன் படம் செய்தேன். கடைக்குட்டி சிங்கம் படத்திற்குப் பிறகு, உழவன் பவுண்டேசன் ஆரம்பித்த பிறகு, சென்னையில் விவசாயிகள் விவசாயம் சார்ந்து வேலை செய்பவர்களைச் சந்தித்துப் பேசினோம். அதில் முக்கியமானவர்கள் ஹிமாக்கரன் அவர்கள், ரேகா அவர்கள், அவர் நண்பர்கள் புரபசர் இஸ்மாயில் அவர்கள், அவர்களோடு சேர்ந்து பேசும்போது,  அவர்கள் எங்களுக்கு நிறைய அட்வைஸ் தந்தார்கள்.  சென்னையில் விவசாயம் சார்ந்து என்னென்ன செய்யலாம் என  பேசும்போது, சென்னையில் திருவிழா நடத்திப் பல ஆண்டுகள் ஆகிவிட்டது. கொரோனாவிற்கு முன்னர் நடந்தது, நம் குழந்தைகளுக்குக் கிராமத்தைப் பற்றி, நம் உணவுகள் பற்றி, நம் பாரம்பரியம் பற்றி தெரியவில்லை, அதைத் தெரியப்படுத்தும் வகையில், பல மாதங்கள் போராடி இந்த செம்பொழில் திருவிழாவை  மீண்டும் ஏற்பாடு செய்து நடத்துகிறார்கள்.
 
இதற்கு உழவன் பவுண்டேசன் ஒரு சிறு உதவியாக இருந்துள்ளது எனக்குப் பெருமை. இங்கு கிராமத்தில் நடக்கும் எல்லாமும் இருக்கிறது.மாட்டு வண்டியில் ஆரம்பித்து, காளைகள், ஒயிலாட்டம், மயிலாட்டம், சின்ன சின்ன உணவுகள், தெருக்கூத்து,  எனத் திருவிழாவில் இருக்கும் அனைத்தும் இங்கு இருக்கிறது. இந்த விழா இன்னும் இரண்டு நாட்கள் நடக்கிறது. 
 
என் குடும்பத்தினர் நாளை வருகிறார்கள். எல்லோரும் வாருங்கள், உங்கள் குழந்தைகளுக்கு நம் பாரம்பரியத்தை அறிமுகப்படுத்துங்கள். ஜல்லிக்கட்டு பற்றிக் கேட்கிறார்கள், சென்னையில் நடந்தால் நல்லது தான், அதையும் இவர்களிடம் சொன்னால் ஏற்பாடு செய்து விடுவார்கள், சென்னையில் மாடு கொண்டு வந்துவிடப் பலர் ஆசைப்படுவார்கள், போட்டி போடுவார்கள், எல்லா காளைகளும் வந்துவிடும். நான் நிஜத்தில் ஜல்லிக்கட்டு பார்த்ததில்லை, மெய்யழகன் பட ஷீட்டிங்கில் தான் சென்று பார்த்தேன். அது பிரமாதமான ஒரு விசயம். மாட்டை அடக்குவதோ, காயப்படுத்துவதோ இல்லை, வெளிநாடுகளில் நடக்கும் போட்டிகளில் மாட்டைக் காயப்படுத்துவார்கள் ஆனால் நம் ஜல்லிக்கட்டு ஏறி தழுவுவது தான். மாட்டை அரவணைப்பது தான் நம் ஜல்லிக்கட்டு. இங்கு இந்த திருவிழாவில் பல விவசாயிகள் தங்கள் விலை பொருட்களைக் காட்சிப்படுத்தியுள்ளார்கள். 
 
எல்லோரும் வந்து பார்வையிடுங்கள். இந்த கொண்டாட்டத்தில் நீங்களும் இணையுங்கள். அனைவருக்கும் நன்றி என்றார்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரஷ்ய சினிமாவின் பாரம்பரியம் மிக்க MOSFILM ஸ்டுடியோவின் 100-வது ஆண்டு விழாவை வெற்றிகரமாக கொண்டாடியது!.