இன்று மாலை மற்றும் இரவில் 18 மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடந்த சில நாட்களாக சென்னை உள்பட தமிழகம் முழுவதும் மேற்கு திசை காற்றின் வேகத்தில் மாறுபாடு காரணமாக மிதமான மழை முதல் கன மழை வரை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.
அந்த வகையில், இன்று சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தின் உள்பகுதிகளில் வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சியினால் 18 மாவட்டங்களில் மழை பெய்யும் என்று அறிவித்துள்ளது.
கோவை, நீலகிரி, திருப்பூர், தேனி, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் அடுத்த 48 மணி நேரத்தில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் சில பகுதிகளில் லேசான மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதேபோல், மன்னார் வளைகுடா, தென் தமிழக கடலோர பகுதிகள், குமரி கடல் பகுதிகளில் சூறாவளி காற்று வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.