Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தமிழ் சினிமாவிலேயே தனித்துவமான ஒரு நடிகர்… எம் ஆர் ராதாவின் பிறந்தநாள் இன்று!

தமிழ் சினிமாவிலேயே தனித்துவமான ஒரு நடிகர்… எம் ஆர் ராதாவின் பிறந்தநாள் இன்று!
, வெள்ளி, 14 ஏப்ரல் 2023 (09:25 IST)
தமிழ் சினிமாவில் நடிப்புக்கு இலக்கணமாக போற்றப்படும் நடிகரான சிவாஜி கணேசனே குருவாக ஏற்றுக்கொண்ட நடிகர் என்றால் அது எம் ஆர் ராதாதான். அந்த அளவுக்கு தனது நடிப்பு மற்றும் உடல்மொழியால் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்துபவர். இப்போது கூட அவரின் ரத்தக்கண்ணீர் திரைப்படம் இளைஞர்கள் மத்தியில் பிரபலமாகப் பேசப்பட்டு வருகிறது. தமிழ் சினிமாவில் எந்தவொரு நடிகரும், உடல் மொழி மற்றும் குரல் ஏற்ற இறக்கங்களை வெளியிட்டவர் இல்லை என்று சொல்லலாம். பின்னர் அவரின் மகனான ராதாரவி மற்றும் விவேக் போன்றவர்கள் அவரின் உடல்மொழியை சில படங்களில் பிரதியெடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

1940 களிலேயே சினிமாவில் அறிமுகம் ஆகி இருந்தாலும், அவருக்கு சினிமாவில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது 1954 ஆம் ஆண்டு வந்த ரத்தக் கண்ணீர் திரைப்படம்தான். அந்த படத்தில் நடிக்கும் போதே கிட்டத்தட்ட அவருக்கு 50 வயது ஆகியிருந்தது. அதன் பிறகும் அவர் சினிமாவில் கவனம் செலுத்தவில்லை, மாறாக நாடகங்களிலேயே அதிக கவனம் செலுத்தினார்.

ஆனால் சிவாஜியோடு அவர் நடித்த பாக பிரிவினை படம் அவரை மீண்டும் தவிர்க்க முடியாத நடிகராக்கியது. அந்த படத்தில் அவர் ஏற்று நடித்த சிங்கப்பூரான் கதாபாத்திரம் மிகப்பெரிய அளவில் பாராட்டுகளைக் குவித்தது. அதன் பின்னர் இறக்கும் வரை சினிமா மற்றும் நாடகம் என இரண்டிலும் பயணித்தார்.
webdunia

பல மனைவிகள், பல குழந்தைகள் என பெருவாழ்வு வாழ்ந்த எம் ஆர் ராதா, பெரியாரின் தீவிரமான தொண்டர். பெரியார் பாராட்டிய ஒரே நடிகரும் எம் ஆர் ராதாதான். எம் ஜி ஆரை சுட்ட வழக்கில் சிறை சென்று வந்த பின்னரும் சினிமாவில் நடித்தார். ஆனால் அவரின் இறுதிகாலம் பிரகாசமாக இல்லை என்றே சொல்லலாம். அவரின் வாரிசுகளான ராதாரவி, ராதிகா, நிரோஷா, எம் ஆர் ஆர் வாசுவிக்ரம் ஆகியோர் இப்போது சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்களாக உள்ளனர்.  ஏப்ரல் 14 1907 ஆம் ஆண்டு பிறந்த எம் ஆர் ராதா, செப்டம்பர் 17 1979 ஆம் ஆண்டு இறந்தார். இன்று அவரின் 116 ஆவது பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. தமிழ் சினிமாவின் தனித்துவமான நடிகரை அவரை பிறந்தநாளில் போற்றுவோம். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரஜினி பட தலைப்பை வைக்கிறதா சூர்யா 42 படக்குழு! லேட்டஸ்ட் தகவல்!