கோலிவுட் திரையுலகின் ஒருசில இயக்குனர்கள் மீது கடந்த சில வருடங்களாக அதிகமாக காப்பி புகார்கள் எழுந்து வருகின்றது. குறிப்பாக அட்லி இயக்கிய மூன்று படங்களுமே காப்பி என்ற புகாரை நெட்டிசன்கள் தெரிவித்து வருகின்றனர். அதேபோல் தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்த 'சர்கார்' படமும் காப்பி என்ற குற்றச்சாட்டுக்கு உள்ளாகி நீதிமன்றத்தில் வழக்கும் நடந்து வருகிறது.
இந்த நிலையில் சமீபத்தில் வெளியான விஜய்சேதுபதி, த்ரிஷா நடிப்பில் உருவான '96' திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது என்பது தெரிந்ததே. இந்த படத்தின் பலமே விஜய்சேதுபதி-த்ரிஷா நடித்த ரயில் காட்சிகளும், சாலையில் நடந்து செல்லும் அருமையான காட்சிகளும் தான். ஆனால் இந்த காட்சிகள் அப்படியே ஆங்கில படம் ஒன்றில் இருந்து காப்பி அடித்துள்ளதாக நெட்டிசன்கள் கண்டுபிடித்துள்ளனர்.
'பிஃபோர் சன்ரைஸ்' என்ற ஆங்கில படத்தில் ரயிலில் சந்திக்கும் ஒரு பெண்ணும், ஒரு இளைஞனும் நட்புடன் பழகுவார்கள். பின்னர் வேறொரு நாளில் இருவரும் சந்தித்தபோது அமெரிக்க சாலை ஒன்றில் இரவு முழுவதும் நடந்து கொண்டே தங்களுடைய காதல் அனுபவங்களை தனித்தனியே சொல்வார்கள் என்பதுதான் இந்த படத்தின் கதை. இந்த கதையை கொஞ்சம் மாற்றி இயக்குனர் பிரேம்குமார் காப்பி அடித்துவிட்டதாக நெட்டிசன்கள் புகார் கூறியுள்ளனர். இந்த புகாருக்கு பிரேம்குமாரும் படக்குழுவினர்களும் என்ன பதில் அளிக்க போகின்றார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்