நடிகர் கமல்ஹாசன் தயாரித்து நடித்து 2013ல் வெளியான படம் விஸ்வரூபம். இப்படத்தின் வெளியீட்டின் போது, கமல்ஹாசனுக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டது. இந்த நாட்டை விட்டே வெளியேறுகிறேன் என கூறும் அளவுக்கு அவருக்கு மன உளைச்சல் ஏற்பட்டது.
விஸ்வரூபம் படத்தில் முஸ்லீம்களை அவமதிக்கும் காட்சிகள் நிறைய இருப்பதாக சில அமைப்புகள் போர்க்கொடி தூக்கியதால், தமிழக அரசு இப்படத்திற்கு தடை விதித்தது. அதன்பின், தடை விலக்கப்பட்டு, அப்படம் வெளியிடப்பட்டது. அதன் வசூல் பல கோடிகளை தாண்டியதாக பலரும் கருத்து தெரிவித்திருந்தனர். ஆனால் கமல்ஹாசன் அதை மறுத்துள்ளார்.
சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:
எனது விஸ்வரூபம் படத்திற்கு தடை விதிக்கப்பட்ட போது சட்ட ரீதியாக போராடி தடையை நீக்கினோம். ஆனால், அப்போது ஆட்சியிலிருந்த அரசு படத்தை மீண்டும் தடை செய்தது. அதன், மக்களின் ஆதரவு பெருகிய பின்னரே, அந்த தடையை நீக்கினார்கள். அந்த சமயத்தில் என் நிதிநிலை மிகவும் பாதிக்கப்பட்டது. அதைத்தான் அவர்களும் திட்டமிட்டனர். என் சொத்துக்கள் அனைத்தையும் அடகு வைத்தேன். அமைதியாகவே இருந்தேன். ஆனால் நான் அவமானப்படுத்தப்பட்டேன். எப்போதுமே வரி ஏய்ப்பு செய்யாத எனக்கு அப்படத்தின் மூலம் ரூ.60 கோடி நஷ்டம் ஏற்பட்டது.
நம் நாட்டில் எல்லோருக்கும் அம்னீஷியா எனும் மறதி நோய் இருக்கிறது. ஊழல் புரையோடிக் கிடக்கும் சமூகத்தில், எனக்கு நேர்ந்த அனைத்தும் மறக்கப்படும். இதில் நான் மக்களுக்கு நன்றி சொல்ல வேண்டும். அவர்கள்தான் என்னை இன்னும் உயிர்ப்புடன் வைத்திருக்கிறார்கள்” என கமல்ஹாசன் தெரிவித்தார்.