Publish Date: Mon, 10 Apr 2017 (18:58 IST)
Updated Date: Mon, 10 Apr 2017 (19:02 IST)
இசையமைப்பாளர் இளையராஜாவோடு பணியாற்ற ஆவலாக இருக்கிறேன் என இயக்குனர் மணிரத்னம் கூறியுள்ளார்.
மணிரத்னத்தின் படமான பகல் நிலவிலிருந்து தளபதி வரை, அனைத்து படங்களுக்கும் இளையராஜாதான் இசையமைத்தார். அந்த அனைத்து படங்களின் பாடல்களும் எவர் கிரீன் ஹிட்டாக ரசிகர்கள் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்துள்ளது.
ஆனால், ரோஜாவில் ஏ.ஆர்.ரகுமானோடு இணைந்த பணியாற்ற தொடங்கிய மணிரத்னம் அதன் பின் அவரோடு மட்டுமே பயணிக்கிறார். மணிரத்னமும், இளையராஜாவும் மீண்டும் இணைந்து பணியாற்ற வேண்டும் என சினிமா ரசிகர்கள் பெரிதும் விரும்புகிறார்கள்.
இந்நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியதாவது:
இளையராஜாவுடன் இணைந்து பணியாற்ற எனக்கு எந்த தயக்கமும் இல்லை. அவரை மிகவும் மிஸ் பண்ணுகிறேன். நான் முதன் முதலாக படம் இயக்கிய போது அவரிடம்தான் போய் நின்றேன். எந்த தயக்கமும் இன்றி சம்மதம் கூறினார். அவரிடமிருந்துதான் இசையில் உள்ள பல விஷயங்களை கற்றுக் கொண்டேன். அவர் ஒரு ஜீனியஸ். அவர் இசை கேட்டு வளர்ந்தவன் நான். இப்போதும் அவரது இசையை ரசிக்கிறேன். அவர் மீது மிகுந்த பக்தியும், மரியாதையும் வைத்திருக்கிறேன். நாங்கள் இணைந்து பணி புரிவதற்கு நல்ல வலுவான கதைக்களம் மற்றும் சூழல் அமைய வேண்டும். அப்படி நடந்தால் நிச்சயம் அவருடன் பணியாற்றுவேன். ஆனால், அது எப்போது நடக்கும் என எனக்குத் தெரியாது” என மணிரத்னம் கூறினார்.