உலகப் புகழ் பெற்ற WWE மல்யுத்தத்தின் ஜாம்பவான் ஹல்க் ஹோகன், தனது 71வது வயதில் நேற்று 24) திடீரென காலமானார். அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாகவும், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாகவும் அவரது குடும்பத்தினர் உறுதிப்படுத்தியுள்ளனர். அவரது இயற்பெயர் டெர்ரி ஜீன் போலியா.
மல்யுத்தத்தின் பொற்காலத்தின் முகமாக போற்றப்பட்ட ஹல்க் ஹோகன், உலகளாவிய சூப்பர் ஸ்டாராகவும், ரசிகர்களின் விருப்பத்துக்குரிய வீரராகவும் திகழ்ந்தார். 1983 ஆம் ஆண்டு உலக மல்யுத்த அமைப்பில் (WWF, தற்போதைய WWE) சேர்ந்தவுடன், அவர் ரசிகர்கள் மத்தியில், குறிப்பாக குழந்தைகள் மத்தியில், மிகப்பெரிய புகழை பெற்றார்.
1984 ஆம் ஆண்டு முதன்முதலாக சாம்பியன்ஷிப்பை வென்றதுடன், இந்த வெற்றியானது அவருக்கு "ஹல்க்மேனியா" என்ற பெயரை பெற்றுத் தந்தது. இந்த சகாப்தத்தில் மல்யுத்த உலகின் முடிசூடா மன்னனாக ஹல்க் ஹோகன் திகழ்ந்தார்.
மல்யுத்தம் தவிர, ஹல்க் ஹோகன் திரைப்படங்கள், தொலைக்காட்சிகள் மற்றும் ரியாலிட்டி டிவி நிகழ்ச்சிகளிலும் நடித்துள்ளார். 'சபர்பன் கமாண்டோ' மற்றும் 'மிஸ்டர். நானி' போன்ற படங்களில் நடித்ததுடன், 'ஹோகன் நோஸ் பெஸ்ட்' என்ற பிரபலமான ரியாலிட்டி தொடரையும் கொண்டிருந்தார். மல்யுத்த உலகின் இந்த ஜாம்பவானின் மறைவு உலகெங்கிலும் உள்ள அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.