இங்கிலாந்தில் நடைபெறும் கவுண்டி கிரிக்கெட் முதல்தர போட்டியில், சர்ரே அணி துர்ஹம் அணிக்கு எதிராக 820 ரன்கள் குவித்து ஒரு வரலாற்று சாதனையை நிகழ்த்தியுள்ளது. கடந்த ஜூன் 29 அன்று தொடங்கிய இந்த போட்டியில், முதலில் பேட்டிங் செய்த சர்ரே அணி, 161.3 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 820 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.
சர்ரே அணியின் தொடக்க வீரரான டோம் சிப்லி அதிரடியாக விளையாடி 305 ரன்கள் குவித்து அணியின் வெற்றிக்கு வலு சேர்த்தார். இவருடன், சாம் கரண், டான் லாரன்ஸ், மற்றும் வில் ஜாக்ஸ் ஆகிய மூவரும் தங்கள் பங்கிற்குச் சதம் அடித்து அசத்தினர்.
126 ஆண்டு கவுண்டி கிரிக்கெட் வரலாற்றில், சர்ரே அணியின் அதிகபட்ச ஸ்கோர் (820 ரன்கள்) இதுவே ஆகும். இதற்கு முன்பு, சர்ரே அணி 811 ரன்கள் எடுத்திருந்தது.
கவுண்டி கிரிக்கெட்டில் இதுவரை முறியடிக்கப்படாமல் இருக்கும் அதிகபட்ச ஸ்கோர், 1896 ஆம் ஆண்டில் யார்க்ஷயர் அணி அடித்த 887 ரன்கள் ஆகும். இந்த வரிசையில் சர்ரே அணி தற்போது நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது.
சர்ரே அணி டிக்ளேர் செய்த பிறகு, துர்ஹம் அணி தற்போது 33 ஓவர்களில் 1 விக்கெட் இழப்பிற்கு 62 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.
வழக்கமாக கவுண்டி கிரிக்கெட்டில் டியூக் பந்து பயன்படுத்தப்படும். ஆனால், இந்த முறை கூக்கபுரா பந்தில் விளையாடப்பட்டது. ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தின் போது வீரர்களுக்குப் பழகுவதற்கு உதவும் என்ற எண்ணத்தில் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் இந்த முடிவை எடுத்தது. ஆனால், லண்டன் வெயிலில் கூக்கபுரா பந்து, பந்துவீச்சாளர்களுக்குப் பெரும் சவாலாக அமைந்ததாகத் தெரிகிறது.