ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியின்போது விலா எலும்பு மற்றும் மண்ணீரல் சிதைவு காயம் அடைந்த இந்திய ஒருநாள் அணியின் துணை தலைவர் ஸ்ரேயாஸ் ஐயரின் உடல்நிலை சீராக இருப்பதாக, டி20 கேப்டன் சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார்.
சூர்யகுமார் பேசுகையில், "ஸ்ரேயாஸ் இப்போது தொலைபேசியில் பதிலளித்து வருகிறார், அனைவருடனும் பேசுகிறார். இது அவரது உடல்நிலை சீராக இருப்பதை காட்டுகிறது" என்று நம்பிக்கை அளித்துள்ளார்.
விலா எலும்பு கூண்டில் காயம் அடைந்து, மண்ணீரல் சிதைவு காரணமாக உள்ளுறுப்பில் ரத்தக்கசிவு ஏற்பட்டதால், ஸ்ரேயாஸ் ஐயர் சிட்னி மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். தற்போது அவர் அங்கிருந்து சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
மைதானத்தில் மருத்துவ ஊழியர்கள் உடனடியாக செயல்பட்டதால், பெரிய ஆபத்து தவிர்க்கப்பட்டதாக பிசிசிஐ மருத்துவ சேவையின் தலைவர் டாக்டர் தின்குஷா பர்திவாலா பாராட்டு தெரிவித்துள்ளார். ஸ்ரேயாஸ் ஐயர் தொடர்ந்து கண்காணிப்பில் இருப்பதாகவும், விரைவில் அவரது குடும்ப உறுப்பினர்கள் சிட்னிக்கு செல்லவிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.