ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று குஜராத் மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையே போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் பஞ்சாப் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் மிக அபாரமாக விளையாடி 97 ரன்கள் அடித்ததை அடுத்து, அந்த அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 243 ரன்கள் எடுத்தது. ஸ்ரேயாஸ் 97 ரன்களும், ஆர்யா 47 ரன்களும் அடித்தனர். கடைசி நேரத்தில் அதிரடியாக களமிறங்கிய சுசான் சிங் 16 பந்துகளில் 44 ரன்கள் அடித்து அணி ஸ்கோரை உயர்த்தினார்.
இதனை அடுத்து, 244 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய குஜராத் அணி தொடக்கத்தில் நன்றாக விளையாடியது. சாய் சுதர்சன் அபாரமாக விளையாடி 41 பந்துகளில் 74 ரன்கள் அடித்தார். அதன் பின் கேப்டன் சுப்மன் கில், ஜாஸ் பட்லர், ரூதர்போர்டு அளவுக்கு நன்றாக விளையாடினார்.
ஆனால், அதன்பின் வந்த பேட்ஸ்மேன்கள் சொதப்பியதால், அந்த அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 232 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால், பஞ்சாப் அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் சிறந்த வீரராக ஸ்ரேயாஸ் ஐயர் தேர்வு செய்யப்பட்டார். இதனால், புள்ளிப் பட்டியலில் பஞ்சாப் அணி மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.