முத்தரப்பு டி20 தொடரில் இருந்து ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி விலகிய நிலையிலும், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டபடி முத்தரப்பு டி20 தொடரை நவம்பர் 17 முதல் 29 வரை லாஹூரில் நடத்த உறுதி செய்துள்ளது. இந்த தொடரில் இலங்கை பங்கேற்கும் நிலையில் இன்னொரு அணியை பாகிஸ்தான் தேடி வருகிறது.
பாகிஸ்தானின் வான்வழி தாக்குதலில் மூன்று ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் உயிரிழந்ததை காரணம் காட்டி, ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இந்த தொடரிலிருந்து விலகியுள்ளது.
மாற்று அணியை சேர்ப்பதற்காக மற்ற கிரிக்கெட் வாரியங்களுடன் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. ஒரு டெஸ்ட் அந்தஸ்து பெற்ற நாட்டை அழைப்பதே முதல் நோக்கம். அதே சமயம், நேபாளம், ஐக்கிய அரபு அமீரகம் போன்ற இணை உறுப்பினர் அணிகளையும் மாற்றுப் பட்டியலில் பரிசீலித்து வருகின்றனர்.
இந்த தொடருக்கு முன்னதாக, பாகிஸ்தான் நவம்பர் 11 முதல் 15 வரை இலங்கையுடன் மூன்று போட்டிகள் கொண்ட இருதரப்பு டி20 தொடரையும் நடத்துகிறது.