தான் வென்ற ஒலிம்பிக் தங்கப் பதக்கத்தை ஆற்றிலே தூக்கி எறிந்த பெருமகன் தான் முகமது அலி என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
விளையாட்டு உலகில் ‘தி கிரேட்’ என்று அழைக்கப்படுவர், குத்துச்சண்டை வீரர் முகமது அலி [வயது 74]. 1960 ஆம் ஆண்டு ரோம் நகரில் நடைபெற்ற ஒலிம்பிக் குத்துச்சண்டை போட்டியின் மிகு எடைப் பிரிவில் தங்கப் பதக்கம் வென்ற முகமது அலி, அதன் பின்னர், களமிறங்கிய அனைத்துப் போட்டிகளிலும் வெற்றி பெற்றார்.
தனது வாழ்நாளில் ஒட்டு மொத்த 61 சர்வதேச போட்டிகளில் விளையாடி 56 வெற்றியைப் பெற்றுள்ளார். 5 போட்டிகளில் மட்டுமே தோல்வியை தழுவியுள்ளது குறிப்பிடத்தக்கது. 37 முறை நாக்-அவுட் முறையில் வென்றார் என்பது குறிப்பிடதக்கது.
1980ஆம் ஆண்டுகளின் வாக்கில் பார்கின்சன் நோயால் முகமது அலி பாதிக்கப்பட்டார். குத்துச் சண்டைகளின் போது அவருக்கு தலையில் விழுந்த குத்துகளால்தான் அவருக்கு அந்த நோய் ஏற்பட்டது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். இந்நிலையில், அவரது உயிர் நேற்று சனிக்கிழமை [04-06-16] பிரிந்தது.
1965ஆம் ஆண்டு மே மாதம் 25ஆம் தேதி நடைபெற்ற போட்டியில் முதல் சுற்றிலேயே ஒரே குத்தில் சோனி லிஸ்டனை முகமது அலி வெளியேற்றினார். இப்போட்டி உலக குத்துச் சண்டை வரலாற்றில் மிகவும் பிரபலமான போட்டிகளில் ஒன்றாக இன்றளவும் திகழ்ந்து வருகிறது.
இந்நிலையில், திமுக தலைவர் கருணாநிதி முகமது அலி மரணத்திற்கு வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ”முகமது அலி மறைவு குறித்தும், வாழ்க்கை வரலாறு குறித்தும் பல நாளேடுகளிலும் செய்தி வெளிவந்துள்ளது.
4-1-1990 அன்று நான் முதல் அமைச்சராக இருந்த போது சென்னை வந்த அவர் என் இல்லத்திற்கே தன்னுடைய துணைவியாருடன் வருகை தந்ததும், என்னுடன் அவர் அன்போடு உரையாடிக் கொண்டிருந்ததும், அதன் பின்னர் அவர் அண்ணா அறிவாலயத்திற்குச் சென்று சுற்றிப் பார்த்ததும் என் நினைவிலே நிலைத்திருக்கும் நிகழ்வுகளில் ஒன்று.
நிறவெறிக்கு எதிராக தனது உணர்வுகளைப் பதிவு செய்யும் வகையில், ஒரு முறை தான் வென்ற ஒலிம்பிக் தங்கப் பதக்கத்தை ஆற்றிலே தூக்கி எறிந்த பெருமகன் தான் முகமது அலி. அவர் மறைந்து விட்டாலும், குத்துச் சண்டை வரலாற்றில் அவர் பெயர் என்றென்றும் நிச்சயம் நிலைத்திருக்கும்.
வாழ்க்கையில் பல போராட்டங்களைச் சந்தித்த அந்தப் பெருமகனின் மறைவுக்கு என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.