இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமியின் மனைவி ஹசின் ஜாஹா உத்திரபிரதேசப் போலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரரான முகமது ஷமி இப்போது ஐபிஎல் கிரிக்கெட்டில் பஞ்சாப் அணிக்காக விளையாடி வருகிறார். சில மாதங்களுக்கு முன்னர் ஷமி தன்னை அடித்து துன்புறுத்துவதாகவும் அவருக்குப் பல பெண்களோடு தொடர்பு இருப்பதாகவும் பரபரப்பான செய்தியினை வெளியிட்டார் அவரது மனைவி ஹாசின்.
இதையடுத்து புகழ் வெளிச்சத்துக்கு வந்த அவர் செய்தியாளர்களிடம் ’ஷமிக்குப் பாகிஸ்தானைச் சேர்ந்த பலப் பெண்களோடு தொடர்புகள் இருப்பதாகவும், அந்தப் பெண்களின் மூலம் பல சர்வதேசப் போட்டிகளில் அவர் சூதாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.’ இதனையடுத்து அவர் மீது பிசிசிஐ விசாரணை மேற்கொண்டது. ஆனால் அவரைக் குற்றமற்றவர் என அறிவித்தது.
இதனையடுத்து ஷமியும் அவர் மனைவியும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். ஷமியின் மகள் ஹாசினிடம் வளர்ந்து வருகிறாள். இந்நிலையில் நேற்று நள்ளிரவில் தனது மகளோடு ஷமியின் வீட்டுக்கு சென்று ஷமியின் தாய் மற்றும் அவரது சகோதரியோடு தகராறு செய்ததாகவும் அத்துமீறி வீட்டிற்குள் நுழைய முயன்றதாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து ஷமியின் தாயார் அளித்த புகாரின் அடிப்படையில் அவரை உத்தரப்பிரதேச போலிஸார் அவரை ஐபிசி 155 பிரிவின் கீழ் கைது செய்துள்ளனர்.