ஜப்பான் நீச்சல் வீராங்கனை ரிகாகோ, ஆசிய விளையாட்டில் நீச்சலில் 6 தங்கம் வென்ற முதல் நபர் என்ற மகத்தான சாதனையை படைத்திருக்கிறார்.
18-வது ஆசிய விளையாட்டில் ஜப்பான் நீச்சல் வீராங்கனை 18 வயதான ரிகாகோ இகீ, நீச்சல் குளத்திற்குள் பாய்ந்தால் பதக்கத்தோடு தான் வெளியே வருகிறார். 50 மீட்டர், 100 மீட்டர் பட்டர்பிளை, 50 மீட்டர், 100 மீட்டர் பிரிஸ்டைல், 4x100 மீட்டர் மெட்லே தொடர் நீச்சல், 4x100 மீட்டர் பிரிஸ்டைல் தொடர் நீச்சல் என்று 6 தங்கப்பதக்கங்களை அள்ளியிருக்கிறார்.
இதன் மூலம் ஒரு ஆசிய விளையாட்டில் நீச்சலில் 6 தங்கம் வென்ற முதல் நபர் என்ற மகத்தான சாதனையை படைத்திருக்கிறார். நடப்பு ஆசிய விளையாட்டில் நீச்சலில் மட்டும் ஜப்பான் 19 தங்கம் உள்பட 52 பதக்கம் கைப்பற்றி இருப்பது குறிப்பிடத்தக்கது. வடகொரிய துப்பாக்கி சுடுதல் வீரர் சோ ஜின்-மான் 1982-ம் ஆண்டு ஆசிய விளையாட்டில் 7 தங்கம் வென்றிருந்தார். ஒரு ஆசிய விளையாட்டில் அதிக தங்கம் வென்ற சாதனையாளராக அவர் நீடிக்கிறார்.