ராகுல் மற்றும் பாண்ட்யா இருவரும் பெண்கள் குறித்தும் இந்திய அணியின் ஓய்வறைக் குறித்தும் சர்ச்சைக்குரிய விதத்தில் பேசிய காபி வித் கரண் நிகழ்ச்சி இப்போது ஹாட்ஸ்டாரில் இருந்து தூக்கப்பட்டுள்ளது.
ஜனவரி 6 ஆம் தேதி ஹர்திக் பாண்ட்யா மற்றும் கே எல் ராகுல் பங்குபெற்ற காஃபி வித் கரண் நிகழ்ச்சி ஒளிப்பரப்பனது. இந்த நிகழ்ச்சியை பாலிவுட் இயக்குனர் கரன் ஜோஹர் தொகுத்து வழங்கினார். இதில் சமூகவலைதளங்கள், பெண்கள் மற்றும் இந்திய அணியின் ஓய்வறை தொடர்பான கேள்விகளுக்குப் பாண்ட்யா மற்றும் ராகுல் இருவரும் சர்ச்சைக்குரிய பதிலைக் கூறினர்.
இதையடுத்து பாண்ட்யா மற்றும் ராகுலுக்கு பல்வேறு தரப்பில் இருந்து கண்டனங்கள் எழுந்தன. அதனால் பாண்டியா, ராகுல் இருவரும் அவர்களின் பேச்சுககு விளக்கம் அளிக்க வேண்டும் பிசிசிஐ நோட்டிஸ் அனுப்பியது. மேலும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டு ஒருநாள் போட்டிகளில் விளையாடத் தடையும் விதித்துள்ளது.
இந்நிலையில் அவர்கள் இருவரின் கருத்துக்கு இந்திய முன்னாள், இன்னாள் வீரர்களும் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் இருவரையும் டிவிட்டரில் கடுமையாக சாடியுள்ளார். அதுபோல இந்திய அணியின் கேப்டன் விராட் கோஹ்லியும் ‘ இருவரின் கருத்தும் ஏற்றுக்கொள்ள முடியாதது. அது அவர்களின் சொந்த கருத்து. அதை இந்திய அணியின் கருத்தாக ஏற்றுக்கொள்ள வேண்டாம். அவர்களுக்கு எந்த விதத்திலும் ஆதரவு அளிக்கமாட்டோம்’ எனத் தெரிவித்துள்ளார்.
இதனால் பாண்ட்யா மற்றும் ராகுலின் கிரிக்கெட் வாழ்க்கைக்குப் பெரிய சிக்கல் உருவாகியுள்ளது. இந்த எதிர்பாராத சர்ச்சைகளால் ஹாட்ஸ்டாரில் இருந்து சம்மந்தப்பட்ட எபிசோட் மட்டும் தூக்கப்பட்டுள்ளது.