பாரிஸ் ஒலிம்பிக்ஸில் பாகிஸ்தான் வீரர் தங்கப்பதக்கம் வென்றதை இந்திய வீரர் நீரஜ் சோப்ரா புகழ்ந்து பேசியுள்ளார்.
பாரிஸ் ஒலிம்பிக்ஸில் பல்வேறு விளையாட்டு பிரிவுகளில் இந்தியா உள்ளிட்ட ஏராளமான நாடுகள் விளையாடி வருகின்றன. நேற்று நடந்த ஈட்டி எறிதல் பிரிவில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா இறுதி போட்டியில் விளையாடினார். ஆனால் அவருக்கு இரண்டாவது பதக்கமான வெள்ளிப்பதக்கமே கிடைத்தது. ஆனாலும் இந்த பாரிஸ் ஒலிம்பிக்ஸில் இந்தியா பெறும் முதல் வெள்ளிப்பதக்கம் இதுவாகும்.
அதேசமயம் பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீம் 92.97 மீட்டர் தூரத்திற்கு ஈட்டி வீசி புதிய சாதனை படைத்ததோடு தங்க பதக்கத்தையும் வென்றார். அவருக்கு பாகிஸ்தானில் இருந்து பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வரும் நிலையில் இந்தியர்களும் கூட வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். மேலும் போட்டியின் வெற்றிக்கு பின் அர்ஷத்தும், நீரஜ் சோப்ராவும் ஒருவரை ஒருவர் மகிழ்ச்சியுடன் வாழ்த்திக் கொண்டனர்.
அஷ்ரத் நதீமின் வெற்றி குறித்து பேசிய நீரஜ் சோப்ரா “இந்தியா, பாகிஸ்தான் போன்ற நாடுகளில் ஈட்டி எறிதல் அவ்வளவு பிரபலம் கிடையாது. அர்ஷத் நதீம் எவ்வளவு கடினமாக உழைத்துள்ளார் என எனக்கு தெரியும். அவர் தங்கம் வென்றுள்ளது அவருக்கும் பாகிஸ்தான் மக்களுக்கு சிறப்பான ஒரு தருணம். இந்த வெற்றிக்கு அவர் மிகவும் தகுதியானவர். நாங்கள் எங்கள் நாடுகளை பெருமையடைய செய்துள்ளோம்” என்று கூறியுள்ளார்.
Edit by Prasanth.K